நான் பிஎம்டபிள்யூவில் செல்ல வேண்டும் என்பதற்காக நிறுவனம் தொடங்கவில்லை. பிரெஷ் டெஸ்க் பணியாளர்கள் அனைவரிடத்திலும் பிஎம்டபிபள்யூ இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என கிரிஷ் மாத்ரூபூதம் 2015-ம் ஆண்டு நடந்த டைகான் நிகழ்ச்சியில் கூறினார். (அப்போது நிறுவனத்தின் பெயர் பிரெஷ்டெஸ்க்தான். அதன் பிறகே பெயர் பிரஷ்வொர்க்ஸ் என மாற்றம் செய்யப்பட்டது) பிஎம்டபிள்யு என்பதன் அடையாளம் சொகுசு கார் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என தெரிவித்தார். ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஐபிஒ வெளியாகி இருக்கிறது. நிறுவனத்தில் 76 சதவீத பணியாளர்களிடம் (மொத்த பணியாளர்கள் 4600-க்கு மேல்) பிரஷ் வொர்க்ஸ் பங்குகள் உள்ளன. இதில் 500க்கும் மேற்பட்டவர்களின் சொத்துமதிப்பு கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்திருக்கிறது. சொன்னதை செய்துகாட்டிவிட்டார்.
சென்னை கீழ்க்கட்டளையில் ஆறு நபர்களுடன் தொடங்கப்பட்டது பிரஷ்வொர்க்ஸ். ( நிறுவனர் இருவருடன் சேர்ந்து). 2010-ம் ஆண்டு 50 லட்ச ரூபாயில் வீட்டுக்கடன், இரண்டு குழந்தைகள் என வழக்கமான நடுத்தர குடும்ப வாழ்க்கை முறையில் இருந்தார் கிரீஷ். இதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும்போது அவரது டிவி உடைந்துவிட்டது. இது தொடர்பாக வாடிக்கையாளர் உதவி மையத்துக்கு மெயில் அனுப்பினால் சில மாதங்களாக பதில் வரவில்லை. அப்போதுதான் ஹெல்ப்டேஸ்க் தேவை இருப்பதை உணர்ந்தேன்.
ஆனால் இவருடைய சூழ்நிலையும் இணை நிறுவனர் வீட்டுக்கடன் வாங்கி இருந்தார். அப்போது ஜெண்டெஸ்க் என்னும் கஸ்டமர் சப்போர்ட் நிறுவனம் அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு 300% அளவுக்கு கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக செய்தி வெளியானது. இந்த இரண்டையும் சேர்ந்து கஸ்டமர் சப்போர்ட் நிறுவனம் தொடங்குவதாக முடிவெடுக்கிறார்கள்.
கீழ்கட்டளையில் 6 பேர் இணைந்து நிறுவனம் தொடங்குகிறார்கள். சில மாதங்களில் முதல் புராடக்ட் தயாரானது. முதல் வாடிக்கையாளர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து வருகிறார். இதனை தொடர்ந்து மேலும் சில வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்.
நிதி திரட்டல்
வழக்கமான பிஸினஸ் மாடலை பின்பற்றினால் பெரும் சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்பது எங்கள் அனைவருக்கும் தெரிந்தது. நிறுவனர்கள் ரிஸ்க் எடுத்திருக்கிறார்கள். இதுதவிர நால்வர் சம்பளத்தை குறைத்துக்கொண்டு எங்களிடம் வந்தார்கள். ஒரு வாடிக்கையாளர்களை பிடிக்க பெரும் தொகையை செலவு செய்கிறோம். ஆனால் அவர்களிடம் இருந்து மாதம் தோறும் குறைந்த தொகையே வரும் என்பதால் அதிக வாடிக்கையாளர்கள் பிடித்தால்தான் நாங்கள் தாக்குபிடிக்க முடியும். எங்களை நம்பி சிலர் இருக்கிறார்கள் என்பதால் வாடிக்கையாளர்களை பிடிப்பதற்கு எங்களுக்கு வென்ச்சர் கேபிடல் நிதி தேவைப்பட்டது. வென்ச்சர் கேபிடல் என்பது ராக்கெட் போல, வானத்துக்கும் செல்லும், பிரச்சினையானால் வங்காளவிரிகுடாவிலும் விழும். ஒரு வேளை கடலில் விழுந்தால் மீண்டும் ரெஸ்யூம் எழுதி வேலைக்கு செல்லாம் என பல ஆண்டுக்கு முன்பு பேட்டியில் என்னிடம் தெரிவித்தார்.
2010-ம் ஆண்டு இந்தியாவில் முதலீட்டுக்கான சூழலே கிடையாது. பல வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் சென்னை வந்து சந்திப்பதாக சொல்லுவார்கள். ஆனால் கடைசி நிமிடத்தில் சந்திப்பை ரத்து செய்துவிடுவார்கள். காரணம் ஒரே நிறுவனத்தை சந்திப்பதற்காக முதலீட்டாளர்கள் விரும்பவில்லை. ஆனால் தற்போது சூழல் மிகவும் மாறி இருக்கிறது. தவிர தற்போதைய நிறுவனம் தொடங்குபவர்களுக்கு சிக்கல் இருக்க கூடாது என்பதற்காக ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்கிறோம் என தெரிவித்திருக்கிறார்.
ஒரு வழியாக 2010-ம் ஆண்டு ஆக்செல் பார்ட்னர்ஸ் என்னும் மிகப்பெரிய நிறுவனம் முதலீடு செய்தது. (ஆக்செல் பார்ட்னர் நிறுவனத்தை சேர்ந்த சேகர் கிரானி கிரிஷ் மாத்ருபூதத்தின் மென்டார். அவருடன் உரையாடும்போது சேகர் கிரானி குறித்து குறிப்பிடாமல் இருக்கமாட்டார்) அப்போதும் ஆறு நபர்கள் மட்டுமே நிறுவனத்தில் இருந்தனர். முதலீடு கிடைத்த அடுத்த சில நாட்களில் பிரெஷ்டெஸ்க் காபி அடிக்கிறது என்பது போன்ற கமெண்ட்டை நியூசிலாந்தில் இருந்து ஒருவர் பதிவிடுகிறார். அவர் ஜென்டெஸ்க் என்னும் நிறுவனத்துக்காக இந்த குற்றச்சாடை வைக்கிறார். அவர் சொல்லும் காரணம் டெஸ்க் என்னும் பெயர் இருக்கிறது என்பதுதான்.
டெஸ்க் என்னும் ஆங்கில வார்த்தை ஜெண்டெஸ்க் நிறுவனத்துடையதா என பதில் அளிக்க அவர்கள் bunch of Indian cowboys என பதிவிட பெரும் சண்டை ஆகிவிடுகிறது (http://ripoffornot.org/ fbclid=IwAR1hPcwVn3DbaWQcAHT75y0_lhUV66YQWs-6gh16IzAjUW8CNBkVMzYvJo0#.YU1-0mJBwdU) இது தொடர்பாக 2015-ம் ஆண்டு டை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிரீஷ் பேசும்போது சிறிய நிறுவனத்தை தாக்க கூடாது, அதுவும் இழப்பதற்கு எதுவும் இல்லை என போராடிக் கொண்டிருப்பவனை தாக்க கூடாது என கிரீஷ் பேசினார்.
ஆக்செல் பார்டனரை தொடர்ந்து டைகர் குளோபல், செக்யோயா உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்தது. கூகுள் கேபிடல் நிறுவனம் இந்தியாவில் செய்த முதல் முதலீடு பிரஷ்வொர்க்ஸ்தான். இங்கு தொடங்கிய பயணம் தற்போது அமெரிக்காவில் ஐபிஓ ஆக நிற்கிறது. 800 மடங்குக்கு மேல் சில முதலீட்டாளர்களுக்கு வருமானம் கிடைத்திருக்கிறது.
ஐபிஓக்கு அடுத்து?
சில நாட்களுக்கு முன்பாக ஐபிஓ வெளியானது. தற்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு 13 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கிறது. அமெரிக்காவில் பட்டியலிடும் முதல் சாஸ் நிறுவனமாக நாங்கள் இருக்கிறோம். எங்களை தொடர்ந்து பலரும் சர்வதேச நிறுவனமாக மாறுவார்கள் என கிரிஷ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
நாங்கள் சென்னையில் தொடங்கி இருந்தாலும் அமெரிக்க நிறுவனமாக செயல்பட்டோம். முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள், வருமானம் என பெரும்பாலானவை அமெரிக்காவில் இருந்து வருகிறது. அதனால் அங்கு பட்டியலிடுவதுதான் சரியாக இருக்கும்.
அமெரிக்காவில் பட்டியலாகும் நாள் சந்தோஷமானாது. திருச்சியில் தொடங்கிய பயணம் தற்போது இங்கு இருக்கிறது. இன்று கொண்டாட்டமான நாள். ஆனால் இன்னும் செல்ல வேண்டிய தூரம் இருக்கிறது. இன்று `டே 0’. ஒரு தங்க பதக்கம் வாங்குவதுடன் ஆட்டம் முடியவில்லை, தொடர்ந்து வெற்றி அடைய வேண்டும். நாங்கள் இருக்கும் சந்தையில் 120 பில்லியன் டாலருக்கு வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்பை நோக்கி நாங்கள் செல்கிறோம்.
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு. ஏறிவிட்டோம். சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு என்பதுதான் அடுத்த கட்ட திட்டம் என ஐபிஓவுக்கு பிறகாக பேட்டியில் கிரீஷ் தெரிவித்திருக்கிறார்.