முகேஷ் அம்பானி கத்தார் பொருளாதார மன்றம் நடத்திய கூட்டத்தில் அரபுநாடுகளுக்கும் தனக்கும் இருக்கும் உறவுகள் குறித்தும் கொரோனா கால கட்டத்தில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ரிலையன்ஸ் இண்டர்ஸ்ரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி கலந்துரையாடினார். அப்போது மத்தியக்கிழக்கு நாடுகளுக்கும் உங்களுக்கும் இருக்கும் தொடர்புகள் பற்றியும், கொரோனா கால சவால்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்பது குறித்தும் முகேஷ் அம்பானியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய முகேஷ் அம்பானி பேசியவது:


’’என் உடம்பில் ஓடுவது அரபு ரத்தம்’


எனது அப்பா இளம் இந்தியராக ஏமனுக்கு சென்றார். அங்கேதான் நான் பிறந்தேன். எனது தந்தை தன்னிடம் எப்போதும் அரபு ரத்தம் ஓடுவதாக கூறுவார். அனைத்து அரபுநாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே நூற்றாண்டு காலமாக தொடரும் உறவு இது. தற்போது உலகில் பரவும் கொரோனா தொற்றை நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் நெருக்கடி என்றே கருதுகிறேன். ஆனால் உலகம் இந்த நெருக்கடியை ஏற்க தயாராக இல்லை. இந்த நெருக்கடி மனிதனின் மனதை சோதித்து உலகை துன்பத்திற்குள்ளாக்கி உள்ளது. ஆனால் இறுதியில் வெல்லப்போவது மனிதர்கள்தானே தவிர வைரஸ் அல்ல 


’’கத்தார் சிறிய நாடாயினும் அதன் இதயம் மிகப்பெரிது’


ஒரு வருடத்திற்குள் உலகம் ஒரு தடுப்பூசியை உருவாக்கி, சில ஆண்டுகளில் முழு உலகிற்கும் தடுப்பூசி போடப்படும் என யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. இந்த நெருக்கடி காலத்தில் கத்தாரின் நட்பை இந்தியர்கள் ஒரு போதும் மறக்கமாட்டோம். இந்த நெருக்கடி நேரத்திலும் சரியான நேரத்தில் இந்தியாவுக்குள் மருந்துகள் மற்றும் பொருட்களை வழங்குவதற்கான வேலையை கத்தார் செய்கிறது.  கத்தார் ஒரு சிறிய நாடாக இருக்கலாம் ஆனால் அதன் இதயம் மிகப்பெரியது.  வர்த்தகம் என்பதன் நோக்கம் இரக்கத்துடன் முன்னோக்கி செல்லும் வழி என்றே நான் கருதுகிறேன்.


’’ஜியோ இல்லாத லாக்டவுனை நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை’


கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் 4ஜி நெட்வொர் சேவை வலுவாக உள்ளது. கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ளும் இந்த சமயத்த்ல் 4ஜி நெட்வொர்க்குகள் இல்லாமல் இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்து நான் ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். தற்போது ஏற்பட்டுள்ள டிஜிட்டல் உட்கட்டமைப்பு வீட்டிலிருந்து வேலை செய்ய உதவி வருகிறது. குழந்தைகள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் பாடங்களை கற்றுக் கொள்வதையும் டிஜிட்டல் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. இது மாதிரியான டிஜிட்டல் சேவையை பலப்படுத்துவது எந்த ஒரு பொருளாதாரத்திற்கும் அவசிமான ஒன்று. தகவல் தொடர்பு என்பது உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டிய அடிப்படை தேவைகளாகவும் அடிப்படை உரிமைகளாகவும் மாறிவிட்டது


’’சமத்துவமின்மையை குறைக்கப்பாடுபட வேண்டும்’


தற்போது இருக்கும் கொரோனா தொற்று மனிதகுலத்தின் கடைசி சுகாதார நெருக்கடி அல்ல என்பதை உறுதியாக நம்புகிறேன். நெருக்கடியை எதிர்கொள்ள தயாராக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உலகின் அனைத்து பிரிவுகளிலும் சமமான வாய்ப்பினையும் சமத்துவமின்மையையும் குறைக்க நாம் உண்மையிலேயே பாடுபட வேண்டியுள்ளது. அதற்கு தொழில்துறைக்குள்ளும் அரசாங்கத்திற்குள்ளும் நாம் அனைவருமாக ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம்.