ஐடி துறையில் மூன்லைட்டிங் எனும் சொல் கடந்த சில வாரங்களாக பெரும் விவாதங்களையும் எதிர்ப்புகளையும் பெற்று வரும் நிலையில், இதனை ஊக்குவிக்கும் வகையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டு ஊழியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


மூன்லைட்டிங் என்றால் என்ன?


ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் தன் வழக்கமான பணிநேரம் தவிர்த்து ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளை செய்வது, ஃப்ரீலான்சிங்கில் ஈடுபடுவது ஆகியவை மூன்லைட்டிங் என அழைக்கப்படுகிறது.


இந்த மூன்லைட்டிங் மூறை மூலம் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விதிகளை மீறுவதாகவும், இதன் மூலம் நிறுவனங்கள் குறித்த தகவல்கள் ரகசியங்கள் வெளியாவதற்கு வாய்ப்புகள் உண்டு என்றும் பல நிறுவனங்களின் தலைவர்களும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.


பணி நீக்கம் செய்த விப்ரோ


மற்றொரு தரப்பினர் மூன்லைட்டிங் என்ற சொல்லாடல் மூலம் நிறுவனங்கள் பணியாளர்களின் சுதந்திரத்தில் நிறுவனங்கள் தலையிடுவதாகவும், பணியாளர்கள் வேலை நேரத்துக்குப் பிறகு எப்படி வேண்டுமானாலும் தங்கள் நேரத்தை செலவிடலாம், நிறுவனம் அதில் மூக்கை நுழைக்கக் கூடாது என்றும் வாதிடுகின்றனர்.


ஐடி துறையில் குறிப்பாக இந்த மூன்லைட்டிங் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், முன்னதாக விப்ரோ நிறுவனம் மூன்லைட்டிங்கில் ஈடுபட்ட சுமார் 300 பணியாளர்களை முன்னதாக பணிநீக்கம் செய்தது.


இந்திய நிறுவனங்கள் மூன்லைட்டிங்கை பெரும்பாலும் அனுமதிப்பதில்லை.  எனினும் சில நிறுவனங்கள் சில விதிமுறைகளோடு இதனை அனுமதிக்கிறது.


பச்சைக்கொடி காட்டிய இன்ஃபோசிஸ்!


அந்த வகையில் முன்பிருந்தே மூன்லைட்டிங்குக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்திராத இன்ஃபோசிஸ் நிறுவனம் தற்போது தன் நிறுவன ஊழியர்கள் ஃப்ரீலான்சிங்கில் ஈடுபட அனுமதி அளித்துள்ளது.


தங்கள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே பிற நிறுவனங்களில் வேலை செய்யும் முன்னர் தங்களது மேனேஜர் அல்லது ஹெச் ஆர் அலுவலர்களிடன் ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதிமுறையையும் முன்வைத்துள்ளது.


மேனேஜர் அல்லது ஹெச் ஆர் அலுவலர்கள் இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்கள் தங்கள் போட்டி நிறுவனங்களிடம் பணியாளர்கள் வேலை செய்யவில்லை என்பதை உறுதிபடுத்தியபின் ஒப்புதல் வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் தனது மெய்லில் இன்ஃபோசிஸ் நிறுவனம் மூன்லைட்டிங் எனும் சொல்லாடலை கவனமாகத் தவிர்த்து external gig எனும் குறிப்பிட்ட காலத்துக்கு பணியாற்றக்கூடிய வெளிப்புற வேலைகள் எனும் சொல்லாடலை பயன்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


ஐடி ஊழியர்கள் உற்சாகம்!


இது குறித்து இன்ஃபோசிஸில் பணியாற்றும் நிர்வாக நிலை ஊழியர்களுக்கு முன்னதாக மெய்ல் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக விப்ரோ தலைவர் ரிஷத் ப்ரேம்ஜி மூன்லைட்டிங் முறையை மோசடி எனக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்த நிலையில், விப்ரோவின் இந்த முடிவு ஐடி ஊழியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.


எனினும் நிர்வாகிகள் மூன்லைட்டிங்கை ஆதரிப்பாளர்களா என்ற கவலையையும் ஐடி ஊழியர்கள் முன்வைத்து வருகின்றனர்.