பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் தற்காலிகமாக முடங்கியதால் மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே இரவில் கடுமையாக சரிந்துள்ளது.


வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் நேற்று இரவு 9 மணி முதல் திடீரென்று முடங்கியது. அரசு தகவல்கள்படி இந்தியாவில் 53 கோடி பேர் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். 41 கோடி பேர் பேஸ்புக் மற்றும் 21 கோடி பேர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகின்றனர். பலரும் அன்றாடம் இயங்கும் சமூக வலைதளங்கள் திடீரென்று தடைபட்டதால், பெரும்பாலானோர், தங்களது மொபைலை ரீ-ஸ்டார்ட் செய்வது போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடத் தொடங்கினர்.  


இதனிடையே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் தடை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்தத் தடை குறித்து ட்விட்டரில் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகின.  இதையடுத்து, தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு, அதிகாலை முதல் அவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இதுகுறித்து பேஸ்புக் நிறுவனரும் , சி.இ.ஓ-வுமான மார்க் சக்கர்பெர்க், ‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இடையூறுக்கு மன்னிக்கவும், மக்களுடன் தகவல் தொடர்பில் இருக்க, நீங்கள் எங்கள் சேவைகளை எந்தளவுக்கு நம்பியிருக்கின்றீர்கள் என்று தெரியும்” என்று  பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.




பயனாளர்களுக்கு சில மணி நேர தடை தான் என்றாலும், இந்த திடீர் முடக்கம் காரணமாக மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே இரவில் கடும் சரிவை கண்டுள்ளது.


நேற்றைய தடையால் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு சுமார் 7 பில்லியன் டாலர் சரிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அவரின் சொத்து மதிப்பு 140 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது சொத்து மதிப்பு 121.6 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இதன் மூலம் உலக செல்வந்தர்கள் பட்டியலில், பில் கேட்ஸ்க்கு பின்னால் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் சக்கர்பெர்க். இதற்கு முன்பு சக்கர்பெர்க் 3-வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.


அதேபோல, பேஸ்புக்கின் மதிப்பும் நேற்று ஒரே இரவில் 4.9 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 15 சதவீதமாக சரிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த சரிவுக்கு தொழில்நுட்ப கோளாறு மட்டுமே காரணம் இல்லையாம். பேஸ்புக் முன்னாள் ஊழியர் பிரான்சஸ் ஹவ்கேன் என்பவர் அமெரிக்கா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியும் சரிவுக்கு காரணம் என்கின்றனர். அந்தப் பேட்டியில் ஹவ்கேன் பேஸ்புக் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். ஹவ்கேன் ஏற்கெனவே பேஸ்புக் தவறுகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக பேஸ்புக்கின் நம்பகத்தன்மை கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதுகுறித்து விரைவில் விசாரணை தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.