இந்தியாவில் மிகப்பெரிய இணையதள வர்த்தக நிறுவனமாக ஃப்ளிப்கார்ட் உள்ளது. வீட்டு உபயோக பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்பட அனைத்து வகையான பொருட்களும் ப்ளிப்கார்ட் மூலமாக இணையத்தில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ள முடியும்.


இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் இந்த வசதியை பயன்படுத்துவதால், ப்ளிப்கார்ட் நிறுவனம் பண்டிகை காலங்களில் சலுகைகளை அறிவித்தும் வருகிறது. அதேசமயத்தில் இணையம் மூலமாக பொருட்களை ஆர்டர் செய்யும்போது பல முறை ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதிலாக வேறு பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.




இந்த நிலையில், அஸ்வின் ஹெக்டே என்ற நபர் தன்னுடைய டுவிட்டர் பதிவில் பதிவிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, அவரை டுவிட்டரில் பின்தொடரும் நபர் ஒருவர் ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் ஐபோன் 13 போன் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கும் ஐ போன் பார்சல் சேவை மூலம் கிடைத்துள்ளது.






ப்ளிப்கார்ட் பார்சலை பிரித்துப்பார்த்த அந்த நபருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதாவது, ஐபோன் 13க்கு பதிலாக ஐபோன் 14 அவருக்கு வந்துள்ளது. இதைக்கண்ட அந்த நபர் ஆச்சரியத்தில் உறைந்துள்ளார். ஏனென்றால் ஐபோன் 13 மதிப்பு ரூபாய் 60 ஆயிரம் ஆகும். ஆனால், ஐபோன் 14 மதிப்பு ரூபாய் 80 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சம் வரை ஆகும்.


அந்த நபர் பண்டிகை கால சலுகை ஆஃபரில் ஐபோன் 13-ஐ ரூபாய் 50 ஆயிரத்திற்கு ஆர்டர் செய்திருந்தார். ஆனால், ஐபோன் 14 கிடைத்ததால் அந்த நபருக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அதிக லாபம் என்றே கூறலாம். இந்த பதிவிற்கு கீழ் பலரும் பலவிதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.




கடந்த சில தினங்களுக்கு முன்பு, டெல்லியில் ஒருவர் தனது தந்தைக்கு ஆப்பிள் போன் ஆர்டர் செய்தார். ஆனால், அவருக்கு துணி துவைக்கும் சோப்புதான் பார்சலில் இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அவர் ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்ட போது அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை என்றும் வேதனையுடன் கூறியிருந்தார். இந்த சூழலில்தான் ஐபோன் 13க்கு பதில் ஐபோன் 14 ப்ளிப்கார்டில் வாடிக்கையாளருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.


சமீபகாலமாக, இணையத்தில் ஆர்டர் செய்து பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்று ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதிலாக வேறு பொருட்கள் கிடைக்கப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தக்க தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.