நாடு முழுவதும் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அதிரசம் இல்லாத தீபாவளி பண்டிகைகளை நினைத்து கூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு தீபாவளி பண்டிகையோடு அதிரசம் ஒன்றிவிட்டது.
இத்தகைய தொன்மைவாய்ந்த உணவின் அங்கமாக விளங்கும் பலகாரங்களில் ஒன்றான அதிரசம் தயாரிப்பில் கடந்த மூன்று தலைமுறைகளாக கரூர் அடுத்த வெள்ளியணை கிராமத்தைச் சேர்ந்த முத்து (84) என்பவரது குடும்பம் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக முத்து நம்மிடம் பேசுகையில், 110 வருடங்களாக தொன்றுத்தொட்டு அதிரசம் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம். எனது தந்தை கோபால நாயக்கர் இந்த தொழிலை தொடங்கினார். அப்போதெல்லாம் காலணா, அரையணா என காசு கொடுத்து வாங்குவார்கள். அதுவும் தீபாவளி, ஆயுத பூஜை போன்ற பண்டிகை காலங்களில் சுமார் 60 வருடங்களுக்கு முன் நாளொன்றுக்கு சுமார் 150 ரூபாய் வரை விற்பனையாகும்.
பச்சரிசி மாவு, வெல்லம், எள் ஆகியவற்றின் கலவையைப் பதமாக தயாரித்து, அவற்றை சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை பயன்படுத்தி சுடும்போது உருவாகும் வாசனை பக்கத்து தெரு வரை சென்று மக்களை இழுத்து வரும். இப்பகுதியில் உள்ள நீரின் தன்மையும் இதன் சுவைக்கு முக்கிய காரணம். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வரை நல்ல வியாபாரம் இருந்தது. நாளொன்றுக்கு 5,000 அதிரசங்கள் வரை விற்போம். இப்போது தினமும் 500 அதிரசங்கள் வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது.
5 அதிரச துண்டுகள் கொண்ட' ஒரு பாக்கெட் 25 ரூபாய்க்கு விற்கிறோம். அதை வியாபாரிகள் வாங்கி சென்று கூடுதல் விலைக்கு விற்பார்கள். சம்பிரதாயத்திற்கு என்று திருவிழா, வீட்டு விஷேசம் போன்றவற்றிற்கு வாங்குகிறார்கள். முன்பெல்லாம், அன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவு பண்டமாக அதிரசம் இருந்தது. ஆனால் இன்று அதிரசத்தை உண்டால்தான் அதிசயம் என்ற நிலைக்கு மாறிவிட்டது. பல்வேறு வண்ணங்களில் ரசாயன கலவையால் உருவாக்கப்பட்ட மற்ற நாடுகளின் தின்பண்டங்கள் நம் நாட்டிற்குள் விற்பனையில் சக்கை போடு போடுகின்றன.
நம் முன்னோர்கள் கண்டறிந்த உணவு ஒவ்வொன்றிலும் அத்தனை அதிசயங்கள் புதைந்து கிடக்கிறது என்பதை நாகரீக மோகத்திற்கு அடிமையானவர்களுக்கு தெரிவதில்லை. பீட்சா, பர்க்கர் போன்ற வெளிநாட்டு துரித உணவுகளை உண்டு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல்பருமன் என பல்வேறு நோய்களுக்கு ஆளாகி உடல் அளவால் மட்டுமின்றி, மனதளவிலும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது நாகரீக சமுதாயம்.
அதிரசத்தில் கலக்கப்படும் பச்சரிசி மாவு உடல் வலிமைக்கு உரியது. இயற்கையில் தயாரிக்கப்படும் வெல்லம், எள் ஆகியனவும் மருத்துவ குணம் வாய்ந்தவை. இதனால்தான் அதிரசம் என்ற உண்மையான ரசனையை நம் முன்னோர் உணவு பொருள்களில் ஒன்றாகப் பயன்படுத்தி வந்தனர். நாகரீக மோகத்தை கைவிட்டு, நம் முன்னோர் தந்த இயற்கை உணவுப் பண்டங்களான அதிரசம் போன்ற பொருட்களை நம் உணவில் பயன்படுத்த தொடங்கினால் எந்த நோயும் நம் அண்டாது என்பது நான் அறிந்த உண்மை. இன்று வரை இயற்கையான உணவு முறைகளை கடைப்பிடிப்பதால் இந்த வயதிலும் இந்த தொழிலை எனது மகன்கள் மற்றும் மருமகள்கள் உதவியுடன் தொடர முடிகிறது என்றார் அவர்.