ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 32 ஆண்டுகளாக ஆயுள் சிறை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்குகிறார் இயக்குநர் வெற்றிமாறன்.


வெற்றிமாறன் தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான கதைக்களங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து தனக்கென தனி முத்திரை பதித்திருக்கும் இயக்குநர்.


ஆடுகளம் திரைப்படம் அள்ளிக்குவித்த தேசிய விருதுகள் இதற்கு ஒரு பெரும் சாட்சி. ஆடுகளம் மட்டுமல்ல வடசென்னை, அசுரன் என ஒவ்வொரு படமுமே அவரை வெற்றியாளராகவே வைத்திருக்கிறது.


இந்நிலையில் தான் அற்புதம்மாள் வாழ்க்கை வரலாற்றை வெற்றிமாறன் திரைபடமாக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும் இது குறித்து வெற்றிமாறன், ஒரு தாயின் 32 கால போராட்டத்தை, வேதனையை படமாக்குவது சவாலானது எனக் கூறியுள்ளதாகவும், அற்புதம்மாள் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்பதையும் அவரே விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.




அற்புதம்மாள் யார்?


ராஜீவ் கொலை வழக்கில் தன் மகன் தவறுதலாக தண்டிக்கப்பட்டதாக தன்னந்தனி மனுஷியாகப் போராட ஆரம்பித்தவர் தான் இந்த அற்புதம்மாள். அப்போது அவர் பின்னால் எந்த இயக்கமும் நிற்கவில்லை. தனியொரு மனுஷியாக அங்குமிங்கும் மனுக்களை எடுத்துக் கொண்டு அலைந்தார். என் மகன் அறிவை (பேரறிவாளனை அவர் எப்போதும் அப்படித்தான் கூப்பிடுகிறார்) எப்படியாவது வெளியில் கொண்டு வர வேண்டும் என்று இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கிறார் அந்தத் தாய். இதற்காக அவர் சென்று பார்க்காத அரசியல் தலைவர்கள் இல்லை. பல்வேறு இயக்கங்களையும் சார்ந்து தனது தனி நபர் போராட்டத்தை நடத்தத் தொடங்கினார்.


அதன் நிமித்தமாக அவர் சட்ட நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார். இந்த 32 ஆண்டுகளில் அவர் நிறைய வாசிப்பு மூலம் தன் மனதையும் அறிவையும் இன்னும் விசாலமாக்கிக் கொண்டுள்ளார். அவரின் நீண்ட கால போராட்டத்திற்கு தற்காலிக வெற்றியாகத்தான் பேரறிவாளனுக்கு பரோல் கிடைத்தது. பேரறிவாளனின் சிறுநீரகத் தொற்று பிரச்சினையை கருத்தில் கொண்டு அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று அவருக்கு பரோல் வழங்கப்பட்டு வருகிறது.




கடந்த மே மாதம் முதல் பேரறிவாளன் பரோலில் உள்ளார். எப்போது சிறைக்குப் பின்னால் இருக்கும் அறிவு இப்போதெல்லாம் அருகிலாவது இருக்கிறானே என்பது தான் அற்புதம்மாளின் இப்போதைய இளைப்பாறுதல். ஆனால் அவரின் லட்சியம் இன்னும் நிறைவேறவில்லை. பேரறிவாளனின் விடுதலை தான் அதுமட்டுமே தான் அற்புதம்மாளின் இலக்கு. அதனை நோக்கிய பயணம் இன்னும் தொடர்வதாகவே அவர் கூறுகிறார்.


எதற்காகக் கேட்கிறார்கள் எனத் தெரியாமல் ஒரு பேட்டரி வாங்கித் தந்ததைத் தவிர பேரறிவாளன் ஏதும் செய்யவில்லை என்பதுதான் அவர் தரப்பில் வைக்கப்படும் வாதமாக இருக்கிறது.