உலகம் முழுவதும் 2017ஆம் ஆண்டு '#MeToo' என்ற பெயரில் பெண்கள் பலர் தங்களுக்கு நடைபெற்ற பாலியல் அத்துமீறல்கள் உள்ளிட்டவற்றை வெளியே தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர். இந்தியாவில் 2018ஆம் ஆண்டு முதல் இந்தப் புகார்கள் அதிகளவில் வெளியானது. குறிப்பாக சினிமா நட்சத்திரங்கள் மீது அதிகளவில் புகார்கள் எழுந்தன. தமிழ்நாட்டில் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் தொந்தரவு தொடர்பான புகாரை தெரிவித்தார். அதன்பின்னர் சினிமா துறையிலும் வேறு பல துறைகளிலும் இந்த மீடூ புகார்கள் அதிகம் எழு தொடங்கின. 


அந்தவகையில் தற்போது வரை வெளியே வந்துள்ள முக்கியமான மீடூ புகார்கள் எவை? 


எம்ஜே அக்பர்:




முன்னாள் மத்திய இணையமைச்சர் எம்.ஜே.அக்பர். இவர் மத்திய அமைச்சர் பதவிக்கு வரும் முன்பு பத்திரிகையாளராக பணியாற்றி உள்ளார். அப்போது இவர் மீது பல பெண் பத்திரிகையாளர்கள் புகார் அளித்துள்ளனர். குறிப்பாக பிரியா ரமணி என்ற பத்திரிகையாளர் அளித்த புகாருக்கு எதிராக அக்பர் ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அன்மையில் தீர்ப்பும் வந்தது. அதில் அக்பர் தோல்வியும் அடைந்தார். மத்திய இணையமைச்சர் மீது மீடூ புகார் வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


சேத்தன் பகத்:




இந்தியாவில் பிரபல எழுத்தாளர்களில் ஒருவர் சேத்தன் பகத். இவர் 'டூ ஸ்டேட்ஸ்' உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் மீதும் பெண்களுக்கு தவறான முறையில் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக புகார் எழுந்தது. மேலும் பலர் இவர் புகார் தெரிவித்தனர். எனினும் இந்த புகாருக்கு சேத்தன் பகத் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். 


நடிகர் அர்ஜூன்:




தமிழ்,கன்னட,தெலுங்கு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்தவர் அர்ஜூன் சர்ஜா. இவர் மீது நிபுணன் படத்தின் கன்னட படப்பிடிப்பின் போது நடிகை சுருதி ஹரிஹரன் பாலியல் அத்துமீறல் செய்ததாக புகார் தெரிவித்தார். இந்த புகாரை மறுத்த அர்ஜூன் சுருதி மீது 5 கோடி ரூபாய்க்கு அவதூறு வழக்கு தொடர்ந்தார். 


நடிகர் ஜான் விஜய்:




தமிழ் திரைப்படங்கள் துணை நடிகர் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ஜான் விஜய். இவர் மீது பிரபல பாடகி மற்றும் டிவி தொகுப்பாளர் ஶ்ரீரஞ்சனி பாலியல் புகார் தெரிவித்தார். அவரின் புகாருக்கு பிறகு ஜான் விஜய் நடந்த கொண்ட விதம் தொடர்பாக அவருடைய மனைவி வருத்தம் தெரிவித்தாகவும், ஶ்ரீரஞ்சனி இடம் மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக ஒரு ட்விட்டர் பதிவையும் செய்திருந்தார். 


 






சுசி கணேசன்:




தமிழ் திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் மீது எழுத்தாளர் லீனா மணிமேகலை பாலியல் புகார் தெரிவித்தார். அந்தப் புகாருக்கு நடிகை அமலா பால் ஆதரவு தெரிவித்தார். ஏனென்றால் திருட்டு பயலே 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அமலா பால் இடம் சுசி கணேசன் தவறாக நடக்க முயற்சி செய்ததாக புகார் தெரிவித்தார். எனினும் இந்த இரண்டு புகார்களையும் சுசி கணேசன் எதிர்த்தார். அத்துடன் அவர்கள் மீது அவதூறு வழக்கும் தொடர்ந்தார். 


இவர்கள் தவிர தமிழ் திரைப்பட நடிகர்கள், பாலிவுட் நடிகர்கள்,பாடகர்கள், மலையாள நடிகர்கள் உள்ளிட்ட பலர் மீது மீடூ புகார்கள் எழுந்துள்ளன. சின்மயி பலர் மீது குற்றம்சாட்டியிருந்தார்.அதில் வைரமுத்து மீது தான் அதிக வெளிச்சம் பரவியது. வைரமுத்து அளவிற்கு மீடூ விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பலரும் பெரிய அளவில் விமர்சனங்களை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.