ITR Filing: வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்னும் 2 நாட்களோடு முடிவடைய  உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  


2022-23 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். வரி செலுத்துவோர் கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டாம் என்றும் கூடிய விரைவில் தாக்கல் செய்யுமாறும் வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.  இந்நிலையில், NIL  படிவம் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதை ஏன் தாக்கல் செய்ய வேண்டும்? அப்படி என்றால் என்ன? அதை தாக்கல் செய்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது தெரியுமா? அதனை பற்றி விரிவாக காண்போம்.


NIL ரிட்டன் என்றால் என்ன?


பொதுவாக ஒருவரின் ஆண்டு வருமானம் 2.5 லட்ச ரூபாய்க்கு குறைவாக இருந்தால், அவர்கள் வரி ஏதும் கட்ட வேண்டிய அவசியமில்லை. அதன் விளைவாக வருமான வரி செலுத்துவதில் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் 2.5 லட்ச ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் இருந்தாலும், அவர்கள் நில் ரிட்டன் (NIL Return) பதிவு செய்ய  வேண்டும். இதனால் பல நன்மைகள் கிடைக்கும்.


NIL Return என்பது ஆண்டுக்கு 2.5 லட்ச ரூபாய்க்கு குறைவாக வருமானம் பெறுபவர்கள் பதிவு செய்யக் கூடிய படிவம். நில் ரிட்டனைப் பயன்படுத்தி, அந்த நிதியாண்டில் உங்களுக்கு வரி விதிக்கக்கூடிய வருமானம் ஏதும் இல்லை என்று வருமான வரித்துறைக்கு சமர்பிக்கலாம். கனரா, என்.எஸ்.பி.சியின் படி, நீங்கள் நில் ரிட்டனை தாக்கல் செய்ய தேவையில்லை என்றாலும்,  அவ்வாறு செய்வதால் பல நன்மைகள் உள்ளன.


என்னென்ன நன்மைகள்? 



  • விசா அல்லது வங்கிக் கடனுக்காக விண்ணப்பிக்கும்போது வருமான வரிக்கான விவரங்கள் கேட்பார்கள். அதற்கு இந்த நில் ரிட்டன் படிவத்தை தாக்கல் செய்யலாம்.  இந்த நில் ரிட்டனை தாக்கல் செய்வதால், உங்கள் வருமானம் விவரங்களைப் பற்றிய கூடுதல் நகல்களை சமர்பிக்க வேண்டியதை தவிர்க்கலாம்.

  • பாஸ்போர்ட்டுக்காக  விண்ணப்பிக்கும்போது, முகவரி சான்றாக (Address Proof) வெரிஃபிகேசனுக்காக இந்த நில் ரிட்டனை proof ஆக சமர்ப்பிக்கலாம்.

  • நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் உங்கள் சம்பளத்தில் இருந்து டிடிஎஸ் பிடித்திருந்தால், இந்த நில் ரிட்டனை தாக்கல் செய்வதன் மூலம் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் தொகையை விரைவாக திரும்பப் பெறலாம்.

  • பங்குச்சந்தையில் நீங்கள் நஷ்டம் அடைந்து வந்தால், இந்த நில் ரிட்டனை தாக்கல் செய்வதன் மூலம் முன்னோக்கி கொண்டு செல்ல உதவும் என்று தெரிகிறது.


இன்னும் இரண்டு நாள் தான்:


2022-23 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். வரி செலுத்துவோர் கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டாம் என்றும் கூடிய விரைவில் தாக்கல் செய்யுமாறும் வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கூற்றுப்படி, இதுவரை தனிநபர்கள், நிறுவனங்கள் என  7.4 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளன. இது 2021-22 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 6.18 சதவீதம் அதிகம் என்று தெரிவித்தார்.