ஜெய் ஷா எப்படி பிசிசிஐ பொதுச்செயலாளர் பதவிக்கு வந்தார் என அவரது தந்தையான உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக இளைஞரணி நிகழ்ச்சி:
திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அந்த அமைப்பை வலுப்படுத்த அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், திமுக இளைஞர் அணியில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடைபெற்றது. இதற்கு இளைஞர் அணி மாநில செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இளைஞரணி திட்டங்கள்:
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் “10 லட்சம் பேர் பங்கேற்கும் திமுக இளைஞரணி மாநாடு விரைவில் நடத்தப்படும். திமுக கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க மாநிலம் முழுக்க 100 பாசறை கூட்டம் நடைபெறும். நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை முன்னெடுக்கவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதோடு, நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக பெறும்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
அமித் ஷாவிற்கு பதிலடி:
உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்கவே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உழைக்கிறார் என்று மத்திய அமைச்சர் அமித்ஷாவின் குற்றச்சாட்டு தொடர்பாக பேசிய உதயநிதி “நான் மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்று இன்று இந்த பதவிக்கு வந்திருக்கிறேன். நான் அமித்ஷாவை கேட்கிறேன். உங்கள் மகன் ஜெய்ஷா கிரிக்கெட் சங்க தலைவர் ஆகியிருக்கிறாரே, அவர் எத்தனை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார்? எத்தனை ரன்கள் அடித்தார்? நான் ஏதாவது கேட்டேனா? ஜெய்ஷா நடத்தி வரும் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2014-ல் வெறும் ரூ.74 லட்சம் தான். இப்போது அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.130 கோடி. இது எப்படி வந்தது? இந்த திடீர் வளர்ச்சி எப்படி வந்தது?” என கேள்விகளை அடுக்கியுள்ளார். இதற்கு பாஜக தரபில் இருந்து எந்தவித விளக்கமும் இதுவரை வரவில்லை.
அமித் ஷா பேசியது என்ன?
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையின் மாநிலம் முழுவதுமான நடைபயணத்தை, உள்துறை அமைச்சர் அமித் ஷா ராமேஸ்வரத்தில் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர் “எதிர்க்கட்சிகளின் கூட்டணி நாட்டை வளர்க்க வேண்டும் என நினைக்கவில்லை. அவர்களது குடும்பத்தை வளர்க்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். சோனியா காந்திக்கு ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என ஆசை. ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்று விருப்பம்” என குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு தான் உதயநிதி ஸ்டாலின் தற்போது பதிலடி தந்துள்ளார்.