தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் முக்கியமான வங்கிகள் ஒன்று தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி. இந்த வங்கி அண்மையில் தன்னுடைய ஐபிஓ திட்டத்தை அறிவித்திருந்தது. அதன்படி சுமார் 831 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய முடிவு செய்தது. இதற்கான முன்பதிவை கடந்த 5 மற்றும் 6ஆம் தேதிகளில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஐபிஓ பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஐபிஓ பங்குகள் 495 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது ஐபிஓ பங்குகளுக்கு வழங்கப்பட்ட 510 ரூபாயைவிட 3% சலுகையுடன் பட்டியலாகி உள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மதிப்பு தற்போது 8075.92 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஐபிஓ முன்பதிவு நடைபெற்றது. அப்போது 6ஆம் தேதி அதிக நபர்கள் இந்த ஐபிஓ பங்குகளை வாங்க ஆர்வம் காட்டினர். மொத்தமாக 87,12,000 பங்குகளுக்கு சுமார் 2,49,39,292 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இது எதிர்பார்க்கப்பட்டதைவிட 2.86 மடங்கு அதிகமாக நபர்கள் முன்பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த பங்குகள் எந்த விலைக்கு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என்ற ஆர்வம் எழுந்தது. இந்தச் சூழலில் 3% சலுகை விலையில் இந்த பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஐபிஓ என்றால் என்ன?
பங்குச்சந்தைகளில் ஒரு பெரிய நிறுவனம் அல்லது புதிய நிறுவனம் அல்லது ஒரு பழைய நிறுவனம் ஆகிய எதுவாக இருந்தாலும் நுழைய வேண்டும் என்றால் அது ஐபிஓ என்ற முறை மூலமாக நுழைய முடியும். அதாவது ஐபிஓ என்பது முதல் முறையாக ஒரு நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் விற்பனை செய்யப்படும் முறை. இந்த முறையின் மூலமாக ஒரு நிறுவனம் தன்னுடைய பங்குகளை முதல் முறையாக மக்களிடம் விற்பனை செய்ய முடியும். ஐபிஓ மூலம் அந்த நிறுவனத்தின் பங்குகள் மக்களிடம் விற்பனைக்கு வரும். அதற்கு முன்பு வரை அந்த நிறுவனத்தின் பங்குகள் நிறுவனத்தை தொடங்கியவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இடம் இருக்கும்.
ஐபிஓ என்பது எங்கே விற்கப்படும்?
பங்குச்சந்தை இரண்டு வகைப்படும். முதன்மை பங்குச் சந்தை (primary market) மற்றும் இரண்டாம் ரீதி பங்குச் சந்தை(secondary market). இதில் ஐபிஓ என்பது எப்போதும் முதன்மை பங்குச் சந்தையில் விற்கப்படும். முதன்மை சந்தையில் ஐபிஓ மூலம் மக்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை முதல் முறையாக வாங்குவார்கள்.
அதன்பின்னர் இந்த பங்குகளை மக்கள் தங்களுக்குள் விற்பனை செய்ய இரண்டாம் ரீதி பங்குச் சந்தையில் (secondary market) செய்ய வேண்டும். இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் அந்த பங்குச்சந்தையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு பங்குச் சந்தையும் இந்திய பங்குச்சந்தை மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (செபி) கட்டுப்பாட்டிற்குள் வரும். செபி அளிக்கும் நெறிமுறைகள் மற்றும் அனுமதி மூலமே பங்குகளின் விற்பனை இந்தியாவில் நடைபெறும்.