சர்வதேச அளவில் பிரபலமான அழகுசாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான ரெவ்லான் நிறுவனம் திவாலாகியிருப்பதாகவும், கடும் கடன் சுமையோடு இருப்பதாகவும், வியாபாரத்தை மேற்கொள்ள திண்டாடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 


இந்த விவகாரம் தொடர்பாக, ரெவ்லான் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பதைப் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், இது மாறலாம் எனவும் கூறப்படுகிறது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக ரெவ்லான் நிறுவனம் சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 


கடந்த ஜூன் 10 அன்று, ரெவ்லான் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் சுமார் 53 சதவிகிதம் வீழ்ச்சியடைந்து சாதனை படைத்தன. இதனைத் தொடர்ந்து, பெருநிறுவனங்களின் கடன் தொடர்பாக செய்தி வெளியிடும் ரியோர்க் தளம், ரெவ்லான் நிறுவனம் திவால் ஆகியிருக்கலாம் என சந்தேகத்தை எழுப்பியிருந்தது. 



நியூயார்க் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரெவ்லான் நிறுவனத்தை மெக் ஆண்ட்ரூஸ், ஃபோர்ப்ஸ் ஆகியோர் நடத்தி வருவதோடு, பில்லியனரான ரான் பெரெல்மேனும் இணைந்து நடத்தி வருகிறார். 


ரெவ்லான் நிறுவனம் தனது நீண்ட கால போட்டியாளரான எஸ்டீ லௌடெர் நிறுவனத்திடம் கடும் போட்டியைச் சந்தித்து வருகிறது. மேலும், சமூக வலைத்தளங்களின் மூலமாக பிரபலமான பல்வேறு சிறிய பிராண்ட்கள் காரணமாகவும் ரெவ்லான் நிறுவனத்தின் தயாரிப்புகள் சரிந்து வருகின்றன. கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பிருந்தே, ரெவ்லான் நிறுவனத்தின் விற்பனை சரிந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. 



ரெவ்லான் நிறுவனம் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தொகையைக் கடன் சுமையாகக் கொண்டுள்ளது. மேலும், பல்வேறு தருணங்களில் கடன் சுமையைக் குறைக்க வெவ்வேறு விதமான வழிகளையும் இந்நிறுவனம் பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, மொத்த செலவுகளுள் சுமார் 248 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை வருடாந்திர வட்டியாக அளித்ததாகக் கூறியுள்ளது ரெவ்லான் நிறுவனம். உலகம் முழுவதும் சுமார் 150 கிளைகளைக் கொண்டிருக்கும் ரெவ்லான் நிறுவனம் சுமார் 15 அழகுசாதனப் பொருள்களின் பிராண்ட்களை வெளியிட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண