உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் பங்குச் சந்தை இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 5.4 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் புதன்கிழமை நடைபெற்ற பிஎஸ்இ- சென்செக்ஸ் கீழ் வரும் நிறுவனங்களின் சந்தை மூலதனம் இரண்டே நாட்களில் ரூ. 7,21,949.74 கோடி உயர்ந்து, ரூ. 2,48,32,780.78 கோடியாக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. போலவே, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 16,700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.
முன்னதாக, உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா தொடங்கிய போர் கச்சா எண்ணெய் மற்றும் பங்குச் சந்தையில் கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 7 வரை மிகவும் மோசமாக பாதித்தன. இதனால் பங்குச் சந்தைகள் வரலாறு காணத அளவில் கடும் வீழ்ச்சியடைந்தன. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு, பங்குச் சந்தைகள் சரிவிலிருந்து மீண்டு பங்குகளின் மதிப்பு உயரத் தொடங்கின.
இந்நிலையில், தற்போது ஐந்து மாநிலங்களின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் சில சுற்றின் முடிவில், பாஜக முன்னிலையில் வகித்து வருகிறது. இதனால் இன்றைய பங்குச் சந்தை உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது. நிதி, ஆட்டோமொபைல் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பங்குகள் மிகப் பெரிய அளவில் லாபத்துடன் வர்த்தகமாகியது.
30 நிறுவனங்களின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 1,595.1 புள்ளிகள் அல்லது 2.9 சதவீதம் அதிகரித்து 56,242.5 ஆகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி பெஞ்ச்மார்க் 411.8 புள்ளிகள் அல்லது 2.5 சதவீதம் அதிகரித்து 16,757.1 ஆகவும் வர்த்தகத்தை தொடங்கியது.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால், பங்குச் சந்தையில் பங்குகளின் மதிப்பு அதிகரித்தது.
டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, மாருதி சுஸுகி, ஏசியன் பெயிண்ட்ஸ், எஸ்பிஐ மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள்3.2 சதவிகிதம் முதல் 6.3 சதவிகிதம் வரை உயர்ந்தன. கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, ஹிண்டால்கோ மற்றும் ஐடிசி ஆகியவற்றின் பங்குகள் 0.2-0.3 சதவீதம் குறைந்தது. ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் பங்குகளும் ஏற்றத்துடன் இருந்தன.
Punjab Election Result 2022: மக்களின் குரல்.. கடவுளின் குரல்...- தோல்வியை ஒப்புக் கொண்ட சித்து