விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது மாரங்கியூர், பையூர், கொங்காரயநல்லூர், சேத்தூர். இந்த 4 கிராமங்களின் இருபுறமும் தென்பெண்ணையாறு, கோரையாறு செல்கிறது. தனித்தீவு போல் உள்ள இந்த 4 கிராம மக்களும் விழுப்புரம் நகருக்கு சென்று வர ஏனாதிமங்கலம் மாரங்கியூர் இடையே உள்ள கோரையாற்று தரைப்பாலத்தை பயன்படுத்தி வந்தனர். 1898 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தரைப்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது. அதன்பிறகு அப்பகுதி கிராம மக்கள் தற்காலிகமாக சிமெண்டு குழாய்கள் வைத்து தரைப்பாலத்தை சீரமைத்து, போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் கோரையாற்றில் நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தரைப்பாலம் உடைந்து சேதமடைந்து போனது. இதனால் அங்கு வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சேதமடைந்த தரைப்பாலம் வழியாக ஆபத்துடன் பயணம் செய்து வருகிறார்கள்.
குறிப்பாக 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விழுப்புரம் நகருக்கு செல்லும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் திருவெண்ணெய்நல்லூர் வழியாக 46 கிலோ மீட்டர் தூரம் சுற்றி விழுப்புரத்துக்கு சென்று வருகிறார்கள். விளை பொருட்களை ஏற்றிச் செல்வதிலும் பெரும் சிரமம் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆகவே உடைந்து சேதமடைந்த கோரையாறு தரைப்பாலம் அமைந்துள்ள இடத்தில் உயர்மட்ட பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 38 மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. மாநிலத்தின் சராசரி மழை அளவு 16.84 மி.மீட்டர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக 74.70 மி.மீட்டர் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை 1.10.2021 முதல் 09.11.2021 வரை 362.94 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 248.3 மி.மீட்டரை விட 46 சதவீதம் கூடுதல் ஆகும்.
குறிப்பாக செங்கல்பட்டு, கன்னியாகுமரி, விழுப்புரம், தூத்துக்குடி, தென்காசி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 16 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது. வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும், இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்