2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் ஆன்லைனில கடன் தருவது தொடர்பான மோசடிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட் ஃபோன் மோகம் மற்றும் மலிவான திட்டங்களால், பணம் தேவைப்படும் மக்கள் அங்கீகரிக்கப்படாத கடன் ஆப்களினால் ஏமாற்றப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் புகார்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கடன் வழங்குவதாகக் கூறி மக்களிடம் பணத்தினைப் பெற்று மோசடிகளில் ஈடுபட்டு வரும் ஆன்லைன் இன்ஸ்டண்ட் லோன் ஆப்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஆன்லைன் லோன் ஆப்கள் மற்றும் வெப்சைட்கள்
மேலும் கடன் வழங்கும் ஆன்லைன் ஆப்கள், கடன் வாங்கும் வாடிக்கையாளர்களின் ஃபோனில் உள்ள தொடர்பு எண்கள், கேலரியில் உள்ள தனிப்பட்ட தகவல்களையும் எடுத்து கடனை சரியாக செலுத்த முடியாத தருணத்தில் தவறாகப் பயன்படுத்துகின்றனர். அதாவது, கடனை செலுத்த முடியாத கடனாளரின் போனில் உள்ள நண்பரின் மற்றும் உறவினர்களின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. மேலும் கடனை செலுத்த முடியாத கடனாளரின் புகைபடங்களை மார்பிங் செய்து ஆன்லைனில் பரப்பியதால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் உள்ள ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் கவனத்தினை ஈர்க்கும் வண்ணம் “உடனடிக் கடன், விரைவானக் கடன்” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி ப்ளே ஸ்டோரில் உள்ள ஆன்லைன் ஆப்களின் எண்ணிக்கை மட்டும் 1100க்கும் அதிகம். இதில் மோசடிகளில் ஈடுபடும் ஆப்கள் சுமார் 600க்கு மேல் உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் லெண்டிங் தொடர்பான அறிக்கையில் தெரிவித்துள்ளது. இப்படியான சட்டவிரோதமாக கிடைக்கும் லோன்கள் மற்றும் அது தொடர்பான மோசடிகளைத் தடுக்க இந்திய அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆன்லைன் பிளாட்ஃபார்ம்கள் மற்றும் மொபைல் ஆஃப்கள் மூலம் கடன் வழங்குவது உட்பட டிஜிட்டல் கடன் வழங்குவது குறித்த ரிசர்வ் வங்கியின் பணிக்குழுவின் அறிக்கையில் இதுபற்றிய விபரங்கள் இடம்பெற்றுள்ளன்.
கடன் பெறுபவர்கள் கவனிக்க வேண்டியது
*கடன் வழங்கும் ஆப்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும்.
*கடன் வழங்குபவர்கள் ஆப் மற்றும் வெப் ஸைட்டுடன் அலுவலகமும் வைத்திருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
*ப்ளே ஸ்டோரில் இன்ஸ்டால் செய்யும் ஆப்களின் ரிவ்யூவ் எப்படி உள்ளது என்பதை நிச்சயம் சரி பார்க்க வேண்டும்.
*கடன் வழங்குவோரின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை முழுவதுமாக தெரிந்துகொள்ள வேண்டும்.
*வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்திப் பற்றி துள்ளியமாக தெரிந்துகொள்ள வேண்டும்
*கடன் வாங்குவோரிடம் முந்தைய கடன்களைப் பற்றிய தகவலைப் பெறாத ஆப்களிடன் கடன் பெறவே கூடாது.