இன்ஃபோசிஸ் லிமிடெட் என்பது இந்திய பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகும். இது வணிக ஆலோசனை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அவுட்சோர்சிங் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் புனேவில் நிறுவப்பட்ட நிலையில், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.


வருவாயின் அடிப்படையில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸுக்கு அடுத்தபடியாக, இன்ஃபோசிஸ் நிறுவனம், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகும். உலக அளவில் 602ஆவது பெரிய நிறுவனமாகும்.


பதவி விலகிய இன்ஃபோசிஸ் தலைவர்:


இந்த நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் மோஹித் ஜோஷி அந்த நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இன்ஃபோசிஸில் இருந்து விலகி அதன் போட்டி நிறுவனமான டெக் மஹிந்திராவில் இணைய உள்ளதால் கார்ப்பரேட் உலகமே வியந்து போயுள்ளது.



2000 ஆம் ஆண்டு முதல் இன்ஃபோசிஸின் முக்கிய அங்கமாக இருந்த மோஹித் ஜோஷி, டெக் மஹிந்திராவின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவலை, இரண்டு நிறுவனங்களும் பங்குச் சந்தையிடம் பகிர்ந்து கொண்டுள்ளது.


இதுகுறித்து மும்பை பங்குச் சந்தையிடம் அளிக்கப்பட்ட அறிக்கையில், "மார்ச் 11 முதல், மோஹித் ஜோஷி விடுப்பில் இருக்க உள்ளார். நிறுவனத்துடனான அவரது கடைசி தேதி ஜூன் 9, 2023 ஆகும்.


மோஹித் ஜோஷியின் பங்களிப்புகளுக்கு பாராட்டு:


அடுத்த தலைமுறை டிஜிட்டல் சேவையிலும் ஆலோசனையிலும் உலகளாவிய முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ், அதன் தலைவர் மோஹித் ஜோஷி ராஜினாமா செய்வதாக அறிவித்தது. மார்ச் 11, 2023 முதல் அவர் விடுப்பில் இருக்க உள்ளார். மேலும், நிறுவனத்துடனான அவரது கடைசித் தேதி ஜூன் 09, 2023 ஆகும். 


இயக்குநர்கள் குழு மோஹித் ஜோஷியின் சேவைகள் மற்றும் நிறுவனத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு பாராட்டுகளை பதிவு செய்தது. இது உங்கள் தகவல் மற்றும் பதிவுகளுக்காக.


மோஹித் ஜோஷி இன்ஃபோசிஸில் நிதிச் சேவைகள் மற்றும் உடல்நலம்/வாழ்க்கை அறிவியல் தொடர்பான வணிகத்துறை கவனித்து வந்தார். அவர் எட்ஜ்வெர்வ் சிஸ்டம்ஸ் லிமிடெட்டின் தலைவராகவும் பதவி வகித்தார். நிறுவனத்தின் உலகளாவிய வங்கித் தளமான ஃபினாக்கிளை உள்ளடக்கிய மென்பொருள் வணிகத்தை வழிநடத்தியுள்ளார்.


கடந்த, 2014ஆம் ஆண்டு, உலகப் பொருளாதார மன்றத்தில் குளோபல் யங் லீடர் திட்டத்திற்காக மோஹித் ஜோஷி அழைக்கப்பட்டார். அவர் பிரிட்டிஷ் தொழில்துறை கூட்டமைப்பின் பொருளாதார வளர்ச்சி வாரியத்தின் துணைத் தலைவராகவும், இளம் தலைவர்கள் அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார்.


கல்வி:


டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்ற ஜோஷி, இதற்கு முன்பு ANZ கிரைண்ட்லேஸ் மற்றும் ABN AMRO ஆகியவற்றுடனும் அவர்களது கார்ப்பரேட் மற்றும் முதலீட்டு வங்கியிலும் பணியாற்றியுள்ளார். டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலை பட்டம் பெற்றவர்.