2010ஆம் ஆண்டு திருச்சியை சேர்ந்த கிரிஷ் மாத்ருபூதம் மற்றும் ஷான் கிருஷ்ணசாமி சென்னையில் ஃபிரஸ்டெஸ்க் என்ற நிறுவனத்தை தொடங்கினர். அந்த நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மென்பொருள் தொடர்பான சேவையை வழங்கி வந்தது. அப்படியே படிப்படியாக வளர்ந்த அந்த நிறுவனம் 2017ஆம் ஆண்டு தன்னுடைய பெயரை ஃபிரஸ்வோர்க்ஸ் என்று மாற்றி கொண்டது. அத்துடன் 2018ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிலிகான் வேலிக்கு சென்றது. தன்னுடைய வாடிக்கையாளர்கள் பெருமளவில் அமெரிக்காவில் இருந்ததால் அந்த நிறுவனம் அங்கு தன்னுடைய தொழிலை தொடர்ந்தது. 


இந்நிலையில் அங்கு சென்ற மூன்று ஆண்டுகளுக்குள் அமெரிக்க பங்குச்சந்தையில் பங்குகள் விற்பனை மூலம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக அந்த நிறுவனம் தன்னுடைய புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி இந்தத் திட்டத்திற்கு அந்நிறுவனம் சூப்பர் ஸ்டார் என்று பெயர் வைத்துள்ளது.


இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம், “இந்தத் திட்டத்திற்கு சூப்பர் ஸ்டார் என்று பெயர் வைத்ததன் மூலம் என்னுடைய மானசீக குரு ரஜினி சாருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் அவர் மீது எனக்கு உள்ள அன்பையும் வெளிப்படுத்த விரும்புகிறேன். அவர் தான் என்னுடைய வாழும் ரோல்மாடல். சூப்பர் ஸ்டாரை உலகெங்கும் உள்ள பல லட்சம் ரசிகர்கள் போற்றி பாராட்டு வருகின்றனர். அந்த வகையில் எனக்கு ஒரு நல்ல ரோல்மாடலாக இருப்பவரின் பெயரை வைப்பதில் எனக்கு மகிழ்ச்சி. நன்றி தலைவா” எனக் கூறியுள்ளார். 




இந்த பங்குகள் விற்பனை மூலம் ஃபிரஸ்வோர்க்ஸ் நிறுவனம் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்ட உள்ளது. ஃபிரஸ்வோர்க்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அமெரிக்காவின் என்.ஏ.எஸ்.டிகியூ கோலபல் பங்குச்சந்தையில் விற்கப்பட உள்ளன. இந்தப் பங்குச்சந்தையில் பல பெரிய நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. ஆகவே அதில் சென்னையில் தொடங்கிய நிறுவனம் ஒன்றும் இடம்பெற உள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் இந்தத் திட்டத்திற்கான கோட்நேமாக சூப்பர் ஸ்டார் என்று பெயர் வைத்துள்ளது அனைவரின் கவனைத்தையும் ஈர்த்துள்ளது. 


2021ஆம் ஆண்டு ஃபிரஸ்வோர்க்ஸ் நிறுவனத்தின் வருமானம் தற்போது வரை 169 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. இது 2020ஆம் ஆண்டு அந்த நிறுவனம் அடைந்த 60 மில்லியன் டாலரை விட மிகவும் அதிகமானது என்று கூறப்படுகிறது. ஃபிரஸ்வோர்க்ஸ் நிறுவனத்திற்கு தற்போது உலகம் முழுவதும் 52,500 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிறுவனம் அமெரிக்காவில் இயங்கி வந்தாலும் இதன் பெரும்பாலான ஊழியர்கள் சென்னையில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Gold-Silver Price, 28 August: சர்....னு உயர்ந்த தங்கம்! இன்றைய விலை நிலவரம் இதோ!