108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோயிலான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமி நாள் முதல் ஏழு நாட்கள் பவித்ரோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி ஆவணி மாதம் பௌர்ணமி முதல் தொடங்கி 7 நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவத்தின் 6ஆவது நாளாக இன்று வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பவித்ர நூல் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தில் வீதிஉலா நடைபெற்றது.
பின்னர் யாகசாலையில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு ஆரத்தி செய்யப்பட்டு பிரபந்த கோஷ்டியினர் வேத பாராயணம் செய்ய யாகசாலையில் பூ, பழம், பட்டு, பீதாம்பரம், நவதானியங்கள், உள்ளிட்டவை யாகதீயில் இட்டு ஹோமங்கள் வளர்க்கப்பட்டது. கொரோனா நோய் தொற்று காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் கோயில்களில் பக்தர்கள் வர கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதனால் இன்று வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற பவித்ரோற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடன் காட்சியளித்த வரதராஜப்பெருமாள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
வரதராஜப்பெருமாள் கோவில்
பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களில் ஒன்று காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவில். இது 108 திவ்ய தேசத் தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. மலை மீதுள்ள ஆலயத்தில் வரதராஜப் பெருமாள் வீற்றிருக்கிறார். கீழ் தளத்தில் பெருந்தேவி தாயார் அருள்பாலிக்கிறார். இந்தக் கோவிலுக்கு, ஹொய்சாள மன்னன் வீரபல்லாளன், காளிங்கராயன், பாண்டியன் 5ஆம் சடையவர்மன், சோழ மன்னர்கள் கி.பி. (1018-1246), சேர மன்னர் (1291-1342) ஆகியோர் திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்தில் (1447- 1642), இத்திருக்கோவிலில், பல புதிய கட்டிடங்கள் தோன்றின. அவற்றுள் முக்கியமானது ஒற்றைக்கல் தூண்களில் அழகிய சிற்ப வேலைபாடுகள் நிறைந்ததும், ராமாயணம், மகாபாரதத்தை பிரதிபலிக்கும் சிற்பங்களும் கொண்ட 100 கால் மண்டபம் ஆகும்.
இந்த ஆலயத்தில் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். பிரம்மா தன்னுடைய மனம் தூய்மை பெறுவதற்காக காஞ்சியில் யாகம் செய்தார். அப்போது அவர் தனது மனைவி சரஸ்வதியை விட்டு விட்டு, மற்றவர்களான சாவித்திரி, காயத்திரி ஆகியோரை வைத்து அந்த யாகத்தைச் செய்தார். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி, யாகத்தை அழிப்பதற்காக வேகவதி என்ற ஆறாக உருவெடுத்து, பாய்ந்தோடி வந்தாள். இதையடுத்து பிரம்ம தேவன், மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். பெருமாள், வெள்ளப்பெருக்கு வரும் வழியில் சயனித்து கிடந்தார். இதனால் அவரைத் தாண்டி ஆற்று நீர் செல்ல முடியவில்லை. இப்படி பிரம்மன் வேண்டியதும் வரம் தந்தவர் என்பதால் ‘வரதராஜர்’ என்று பெயர் பெற்றார்.
இந்த ஆலயத்தில் பெருமாளை, ஐராவதம் யானையே மலையாக நின்று தாங்குவதாக ஐதீகம். எனவே இந்த திருத்தலத்திற்கு ‘அத்திகிரி’ என்றும் பெயர் உண்டு. பெருமாளின் துணை கொண்டு யாகத்தை பூர்த்தி செய்த பிரம்மனுக்கு, யாக குண்டத்தில் இருந்து புண்ணிய கோடி விமானத்துடன் பெருமாள் தோன்றி அருள் செய்தார். பிறகு பிரம்ம தேவன், அத்தி மரத்தில் ஒரு சிலை வடித்து அதனை இங்கே பிரதிஷ்டை செய்தார். பிரம்மனின் யாகத்தில் இருந்து 16 கைகளுடன் சங்கு சக்கரம் தாங்கியபடி சுதர்சன ஆழ்வார் தோன்றினார். இவரே இந்த ஆலயத்தில் பிரதான மூர்த்தியாக இருக்கிறார். இவரை வழிபட்ட பிறகே மூலவரான வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.
ஸ்ரீ வேதாந்த தேசிகர், ஒரு ஏழையின் திருமணத்திற்காக இங்குள்ள பெருந்தேவி தாயாரை வணங்கினார். அப்போது தாயாரின் சன்னிதியில் ‘தங்க மழை’ கொட்டியது. இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஆலயமாக இது திகழ்கிறது.