2022-23- ம் நிதியாண்டில், சரக்கு ஏற்றுதல், மின்மயமாக்கல், புதிய பாதை, லோகோ உற்பத்தி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்திய ரயில்வே புதிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
2022-23 –ம் நிதியாண்டில் இந்திய ரயில்வேயின் சாதனைகளின் சிறப்பம்சங்களை இந்திய ரயில்வே துறை வெளியிட்டது.
சரக்கு - வருவாய்:
இந்திய ரயில்வே 2021-22 நிதியாண்டில் சரக்குகளை கையாளுகையில் 1418 மெட்ரிக் டன்கள் என்ற அளவில் இருந்தது. ஆனால் 2022-23 ஆம் நிதி ஆண்டில் இந்திய ரயில்வே 1512 மெட்ரிக் டன்களை கையாண்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 6.63% அதிகமாகும். ஒரு நிதியாண்டில் ரயில்வேக்கு இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாகும்.
அதே நேரத்தில் 2021-22 நிதியாண்டில் வருவாயானது ரூ.1.91 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் 2022-23 ஆம் நிதி ஆண்டில் ரூ.2.44 லட்சம் கோடியாக அதிகரித்தது. இது கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 27.75% அதிகமாகும்.
மின்மயமாக்கல்:
100 சதவீத மின்மயமாக்கலை அடையும் நோக்கில் இந்திய ரயில்வே முன்னேறி வருகிறது. மேலும், உலகின் மிகப்பெரிய பசுமை ரயில் வலையமைப்பாக இந்திய ரயில்வே வேகமாக முன்னேறி வருகிறது. 2021-22 நிதியாண்டில் 6,366 கி.மீ. தூரத்துக்கு மின்மயமாக்கல் செய்யப்பட்டிருந்தது. 2022-23 நிதியாண்டில், இந்திய ரயில்வே வரலாற்றில் 6,542 கிமீ தூரத்துக்கு மின் மயமாக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.76% அதிகரிப்பாகும்..
புதிய பாதையில் (புதிய பாதை / இரட்டை ரயில் பாதை / கேஜ் மாற்றம்):
2021-22 ஆம் ஆண்டில் 2909 கி.மீ உடன் ஒப்பிடும்போது 2022-23 ஆம் ஆண்டில் 5243 கி.மீ தூரத்துக்கு புதிதாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நாளொன்றுக்கு சராசரியாக 14.4 கி.மீ. தூரமாகும். இது இதுவரை இல்லாத மிக அதிகபட்ச தூரம் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இது மட்டுமன்றி சிக்னலிங், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், நடை மேம்பாலங்கள் அமைப்பு, மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் அமைத்தல் ஆகிய பணிகளிலும் இந்திய ரயில்வே துறையால் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.