அமெரிக்காவைச் சேர்ந்த பெப்சி நிறுவனத்தின் பிரபல உணவு தயாரிப்புகளில் ஒன்று ‘லேஸ்’ சிப்ஸ். இந்த சிப்ஸ்களை தயாரிப்பதற்காக எப்.எல் 2027 என்ற வகை உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த வகை உருளைக்கிழங்குகளை தயாரிப்பதற்கான காப்புரிமையை பெப்சி நிறுவனம் இழந்துள்ளது.
இந்த எப்.எல்-2027 வகை உருளைக்கிழங்குகளை, பெப்சி நிறுவனத்திடம் ஒப்பந்தம் பெற்ற விவசாயிகள் மட்டுமே பயிரிட வேண்டும். வேறு விவசாயிகள் பயிரிட்டால் அவர்கள் மீது வழங்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு முதல் குஜராத் மாநிலம் வடக்கு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இந்த எப்.எல் 2027 வகை உருளைக்கிழங்குகளை பயிரிட்டு வந்தனர். இந்த பகுதியைச் சேர்ந்த 12,000 விவசாயிகள் பெப்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து பயிரிட்டு வந்தது.
அதனை தொடர்ந்து, 2016-ம் ஆண்டு முதல் பயிர் வகை பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமை ஆணையத்திடம் (பிபிவி மற்றும் எப்ஆர்ஏ) இந்த வகை உருளைக்கிழங்குகளை பயிரிடுவதற்கான காப்புரிமையை பெற்றது பெப்சி நிறுவனம்.
2019-ம் ஆண்டு, நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யாத நான்கு விவசாயிகள் பயிரிட்டதாக கூறி அவர்கள் மீது பெப்சி நிறுவனம், 4.2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தது. அதனை அடுத்து, குஜராத் மாநிலம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பெப்சி நிறுவனத்தை எதிர்த்தனர்.
ஆனால், அப்போது முடிவு எட்டப்படாத நிலையில், மெசர்ஸ் குருகாந்தி என்ற நிறுவனம் அதே ஆண்டு பெப்சி நிறுவனம் மீது மீண்டும் வழக்கு தொடர்ந்து. இப்போது விசாரணைக்கு வந்த இந்த வழக்கிற்கு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொது நலன் கருதியும், விவசாயிகளின் உரிமையைக் கருத்தில் கொண்டும் பெப்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள காப்புரிமையை ரத்து செய்வதாக பயிர் வகை பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமை ஆணையம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், பெப்சி நிறுவனம் சார்பில் இதுவரை இது குறித்து எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்