வேலூர் மாநகருக்குட்பட்ட அண்ணாசாலையில் வேலூர் தெற்கு காவல் துறையினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மினி வேன் ஒன்றில் கழுதைகளை ஏற்றி கொண்டு ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர் வந்துள்ளனர்.




அவர்கள் காவல் துறையினரை சாலையில் கண்டதும் மினி வேனை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதனையடுத்து சந்தேகம் அடைந்த காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு வாகனத்தை வேகமாக விரட்டி சென்று மக்கான் சிக்னல் அருகே  மடக்கியுள்ளனர். அப்போது மினி வேனில் இருந்த 4 பேர்  தப்பி வேனில் இருந்து குதித்து தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து கழுதையை ஏற்றிவந்த மினி வேன் ஓட்டுநரான சீனிவாசலால்(50) என்பவரை மட்டும் மடக்கிப்பிடித்தனர்.


பிடிபட்ட ஓட்டுனர் சீனிவாசலால் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடத்தலில் ஈடுபட்ட இவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் இருந்து கழுதைகளை இறைச்சிக்காக ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்துடன் கடத்தி வரப்பட்ட 6 கழுதைகளை வேலூர் தெற்கு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆந்திராவை சேர்ந்த ஓட்டுநரிடம் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.




இதுதொடர்பாக காவல் துறையினர் தெரிவிக்கையில் ஆந்திர மாநிலத்தில் வசிப்பவர்களில் சிலர் உடல் வலிமை பெறுவதற்காக கழுதை கறியை (இறைச்சியை) உண்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்க்கு அறிவியல் பூர்வமாக எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் கழுதைகளை இறைச்சிக்காக கொல்வது சட்டப்படி குற்றம் என்று ஆந்திர மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆந்திர மாநில அரசு எச்சரித்துள்ளது.


இப்படியான நிலையில் ஆந்திராவில் போதிய கழுதைகள் இல்லாததால் கழுதை இறைச்சியை உண்ண விரும்பும் சிலர் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து கழுதைகளை இறைச்சிக்காக கொண்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த நிலையில் தான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து கழுதைகளை கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. குறிப்பாக இவர்கள் கழுதையை பணம் கொடுத்து வாங்கவில்லை அங்கிருந்து திருடி சென்றுள்ளனர். வேலூரில் கழுதையை பிடித்தது குறித்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காவல் துறையினருக்கு நாங்கள் தகவல் தெரிவித்த போது அங்கு சிலரது கழுதைகள் திருடு போயிருப்பதாக புகார் வந்துள்ளது. இவர்கள் தான் அந்த கழுதைகளை திருடியிருப்பார்கள் என்றும் தெரியவருகிறது. இருந்தபோதும் ஆரணியில் புகார் அளித்தவர்களை வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்க்கு வர சொல்லியுள்ளோம். அவர்கள் வந்தவுடன் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்ட பிறகு கழுதைகள் ஒப்படைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இறைச்சிக்காக கழுதைகளை ஆந்திராவுக்கு கடத்திய சம்பவம் இப்பகுதியில் வியப்புக்குரியதாக பார்க்கப்பட்டது.