சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு ஒழிப்பு, தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துதல், மாடுகள் சாலையில் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்தல் மற்றும் மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகள் வழங்குவது தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ரிப்பன் கட்டிட வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளும் விதமாக கொசு ஒழிப்பு புகைப்பரப்பும் பணிகள், கொசுக் கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் உள்ளிட்ட கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என மேயர் பிரியா அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துதல், மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்துதல், மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகள் வழங்குதல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகள் குறித்து மேயர் ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியில் 364 கைத் தெளிப்பான்கள், 70 பவர் ஸ்பிரேயர்கள், 210 பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள், கையினால் இயக்கும் 239 புகைப்பரப்பும் இயந்திரங்கள், 3 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்ட 64 புகைப்பரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், கொசுக்களை ஒழிக்கத் தேவையான அனைத்து மருந்துகளும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்திடவும் 3319 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாள்தோறும் காலை, மாலை இருவேளைகளிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான புகை மருந்து அடித்தல் மற்றும் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியினை பணியாளர்கள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள உபயோகமற்ற பொருட்களை அகற்றிடவும், கிணறு, மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றை கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாத வண்ணம் மூடி வைக்கவும், தண்ணீர் நிரப்பிய பூ ஜாடி மற்றும் கீழ்த்தட்டு குளிர்பதனப் பெட்டியின் கீழ்த்தட்டு, மணி பிளான்ட் போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரமொருமுறை அகற்றி தங்களின் வீடு, மொட்டை மாடிகளில் உள்ள மழைநீர் தேங்கும் பொருட்களை அகற்றி, சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்திட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு 7199 மாடுகளும், 2023ஆம் ஆண்டு 4237 மாடுகளும், இந்த ஆண்டில் இதுநாள்வரை 122 மாடுகளும் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான செய்தி குறிப்பில், “ பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெருகி வரும் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவை பிடிக்கப்பட்டு, வாகனங்கள் மூலம் நாய் இனக்கட்டுப்பாடு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கால்நடை மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நாய்க்கடி மூலம் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய வெறிநாய்க்கடி நோய் வராமல் தடுக்க அவைகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் போடப்படுகிறது.
இனக்கட்டுப்பாட்டு மையங்களில் 2022ஆம் ஆண்டு 16,705 இனக்கட்டுப்பாட்டு அனுவை சிகிச்சைகளும், 2023ஆம் ஆண்டு 14,553 அறுவை சிகிச்சைகளும் இந்த ஆண்டில் இதுநாள் வரை 797 நாய்களுக்கு இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடமிருந்து வரும் தெருநாய்கள் தொடர்பான புகார்கள் மீது அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புர சமுதாய நல மையங்கள், சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களில் மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. இங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணிக்கு உரிய நேரத்திற்கு வருகை தந்து மக்களுக்கு சிறப்பாக மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.