வருமான வரி கணக்கு தாக்கல் செய்த பிறகு ஐ.டி. ரீஃப்ண்ட் (IT - Refund -வருமான வரி துறை திரும்பி செலுத்த வேண்டிய தொகை) பெறுவதற்கு உங்கள் வங்கி கணக்கு தகவல்களை வெரிஃபை செய்யும் என்று மொபைலுக்கு வரும் மெசேஜ்கள் போலியானவை என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தனிநபர், தனியார் நிறுவனங்களும் வருமான வரிப் படிவத்தை பூர்த்தி செய்து வருமான வரித் துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும். இதில் கூடுதலாக வரிப் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அந்தத் தொகையை வருமான வரித் துறை தனிநபர் / நிறுவனங்களுக்கு ரீபண்டாக வழங்கும். இந்தாண்டு கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதியுடன் வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடைந்தது. 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரிக்கணக்கிற்கு, கூடுதல் வரி எதுவும் கிடையாது.


5 லட்சம் ரூபாய்க்கு அதிகமான வருமானம் இருந்தால் கூடுதல் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், வருமான வரி தாக்கல் செய்துவிட்டால், அவர்களுக்கு சலுகைகளும் உண்டு.  2023 ஆம் நிதி ஆண்டுக்கான வருமானம் வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கியுள்ளது. அதாவது ஜூலை 31-ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். கடைசி தேதியை தவறவிட்டால், மறுநாள் ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு பிறகு சமர்ப்பிக்கப்படும் வருமான வரிக்கணக்குகளுக்கு தாமத கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்த ஆண்டு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 6.77 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்திருந்ததாக வருமான வரி துறை தெரிவித்திருந்தது. 


போலி மெசேஜ்கள் அலர்ட்


இந்நிலையில்,” உங்களுக்கு ஐ.டி. ரீஃபண்ட் அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகவும் ரூ.15,490 ரீஃபண்ட் தொகையை பெறுவதற்கு வங்கி கணக்கு விரவரங்களை வெரிஃபை செய்யவும். அதற்கு கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்.” என்று மெசேஜ் பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 


 இந்த மெசேஜ் முற்றிலும் போலியானது என்றும் வங்கி கணக்கு தொடர்பாக தகவல்களை பகிர்ந்துகொள்ளும்படி வங்கிகள் ஒருபோதும் கேட்க மாட்டார்கள் என்று பத்திரிகை தகவல் அலுவலகம் ஃபேக்ட்செக் (PIB FactCheck) டிவிட்டரில் தெரிவித்துள்ளது. 


வாடிக்கையாளர்களிடம் வங்கி தங்களது வங்கி கணக்கு தொடர்பான தகவல்கள், பாஸ்வேர்ட் உள்ளிட்டவற்றை கால் அல்லது மெசேஜ் வாயிலாக ஒருபோதும் கேட்காது. இப்படியான மெசேஜ்களை யாரும் நம்பி அதில் வரும் லிங்கை க்ளிக் செய்யவோ அல்லது மெசேஜ் வரும் எண்ணை அழைக்கவோ வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.