கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி அதன் மூலம் பெறப்படும் வருமானத்துக்கு ஒரு நபர் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று விளக்கமளித்துள்ளது ஜிஎஸ்டி கவுன்சில் அங்கமான அத்தாரிட்டி ஆஃப் அட்வான்ஸ் ரூலிங்.
கர்நாடகாவின் அத்தாரிட்டி ஆஃப் அட்வான்ஸ் ரூலிங் அமைப்பு தான் இந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளது.
முதலில் ஜிஎஸ்டி என்றால் என்னவென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்பதின் சுருக்கமே ஜிஎஸ்டி. ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்பனைக்குக் கொண்டுவர விற்பனை வரி, சேவை வரி, உற்பத்தி வரி, நுழைவு வரி, கலால் வரி, கல்வித் தீர்வை, வாட் என்பன உள்ளிட்ட பல வரிகள் விதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாதிரியான வரி விதிப்பு நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில், இதையெல்லாம் தவிர்த்து அனைத்துக்கும் சேர்த்து ஒரு வரி என்பதுதான் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி.
இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த சாய்ராம் கோபாலகிருஷ்ண பாட் என்பவர், கெஸ்ட் லெக்சர் மூலம் ஈட்டும் வருமானம் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு உட்பட்டதா என்று கர்நாடக அத்தாரிட்டி ஆஃப் அட்வான்ஸ் ரூலிங்கிடம் விளக்கம் கேட்டிருந்தார்.
அதற்கு அந்த அமைப்பும், ஆம், கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது.
அதில், ஜிஎஸ்டி வரி விலக்கு பிற சில அம்சங்கள் தேவை. தொழில்முறை, தொழில்நுட்ப, வர்த்தக சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு கிடையாது. இந்த மாதிரியான தொழில்முறை, தொழில்நுட்ப, வர்த்தக சேவைகள் வழங்குவோர் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாக ஈட்டுவோர் நிச்சயமாக 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து , ஏஎம்ஆர்சி அன்ட் அசோசியேட்ஸ் சீனியர் பார்டனர் ராஜத் மோகன் கூறுகையில் “கர்நாடக ஏஏஆர் அளித்த விளக்கத்தின் மூலம் ப்ரீலான்ஸிங் முறையில் லட்சக்கணக்கில் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் தங்களின் அனுபவங்களையும், கல்வியறிவையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். அதற்காக குறிப்பிட்ட தொகையை பெற்று வருகின்றனர்.
இனிமேல், அவர்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பு வரம்ப்புக்குள் வருவார்கள். பல்வேறு நிறுவனங்களில் பகுதி நேர வழிகாட்டிகளாக, பயிற்றுனர்களாக, ஆலோசகராக இருந்து வருபவர்களும் இனிமேல் ஜிஎஸ்டி வரிக்குள் வந்து 18 சதவீதம் வரி செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல் இது போன்ற கவுரவ விரிவுரையாளர் பணி, ஃப்ரீலான்சிங் ஆகிய பணிகளில் உள்ளோர் மத்தியில் பேரதிர்ச்சியாக இறங்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.