கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என ஹுண்டாய் ஆலையில் தொழிலாளா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து தொழிற்சாலைக்கு 5 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் ஹுண்டாய் காா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் சுமாா் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் இங்கு பணிபுரியும் தொழிலாளா்களில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் கடந்த இரண்டு வாரங்களில் 5 தொழிலாளா்கள் தொற்றால் உயிரிழந்துள்ளனா்.
இதனால் ஹுண்டாய் ஆலையில், கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஒரு வாரத்துக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் எனக் கோரி 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து தொழிலாளா்கள் மற்றும் தொழிற்சாலை நிா்வாகத்தினா் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 25-ஆம் தேதி முதல் வரும் 29-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு ஆலைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்கள் கூட இதில் மூடப்பட்டு பலர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். இருப்பினும் உயிர் காக்கும் நடவடிக்கை என்பதால் இந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதே நேரத்தில் விதிமுறைகளுடன் செயல்படுகிறோம் என்கிற பெயரில், சில பெரு நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி தொழிற்சாலைக்கு வரவழைக்கின்றனர். தொற்றுக்கு பெரு நிறுவனம், சிறு நிறுவனம் தெரியாது.
தவிர யாரிடத்தில் தொற்று இருக்கும் என்பது மற்றொருவருக்கு தெரியாது. அப்படிபட்ட நிலையில் பெரிய தொழிற்சாலைகளில் பலர் கூடினால், அது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே விதிமுறை என வரும் போது, அனைத்து நிறுவனங்களும் சமம் என்கிற அடிப்படையில் தொழிலாளர்கள் நலன் கருதி அனைத்து நிறுவனங்களின் செயல்பாட்டையும் நிறுத்த வேண்டும். பெரும்பாலும் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் தான் பெரு நிறுவனங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்படும் நிறுவனங்களின் ஊழியர்களின் பாதுகாப்பு மட்டுமின்றி, அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும் அபாயம் இருப்பதால் பொதுவான ஊரடங்கை அனைத்து நிறுவனத்திலும் அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி பல தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, விடுப்பு கேட்பவர்களுக்கு பணி நீக்க மிரட்டல் விடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகிறது. தமிழக அரசு இது குறித்து விரிவான விசாரணை நடத்தி தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.