மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்திய சென்னை அசோக் நகர் மகளிர் போலீஸார் போக்சோ சட்டப்பிரிவு, 354 ஏ (பாலியல் தொல்லை), தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் ராஜகோபாலன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, அவர் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


முன்னதாக, சென்னை கே.கே.நகரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வணிகவியல் பாடம் எடுக்கும் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜகோபாலன். இவர் மீது இந்த பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகார் ஒன்றை பதிவிட்டிருந்தார்.


அந்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச செய்திகளை அனுப்பியதும், மாணவிகளுடனான ஆன்லைன் வகுப்பின்போது அரை நிர்வாணத்தில் மாணவிகளுக்கு அவர் பாடம் எடுத்ததையும் ஆதாரத்துடன் அவர் பகிர்ந்திருந்தார். மேலும், அவர் மாணவிகளை இரவில் வீடியோ கால் செய்ய சொல்லி வற்புறுத்துவதும், திரைப்படங்களுக்கு செல்ல அழைப்பதும் என்று மாணவிகளுக்கு தொடர்ந்து தொல்லை அளித்து வந்ததும் தெரியவந்துள்ளது. முன்னாள் மாணவியின் இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த புகார் தொடர்பாக உடனே விசாரிக்க வேண்டும் என்றும், ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.




இதையடுத்து, சென்னை, அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அந்த பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். நங்கநல்லூரில் வசித்து வரும் ஆசிரியர் ராஜகோபாலனின் வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு இருந்த அவரது லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். ஆனால், இந்த விவகாரம் வெளியே தெரிந்தவுடன் ஆசிரியர் ராஜகோபாலன்  தனது செல்போனில் இருந்த வாட்ஸ் அப் உரையாடல் மற்றும் மாணவிகளுக்கு அனுப்பிய அந்தரங்க புகைப்படங்கள் ஆகியவற்றை நீக்கியுள்ளார். ஆனால், போலீசார் தொழில்நுட்ப உதவியுடன் அவர் செல்போனில் நீக்கிய அனைத்து தகவல்களையும் மீண்டும் மீட்டனர்.



பின்னர், அந்த ஆதாரங்களுடன் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு தொடர்ந்து இதுபோன்று ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புவதும், அவர்களுக்கு ஆபாச படங்களின் இணைப்புகளை வகுப்பு குழுவிலே பகிர்ந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் ராஜகோபால் இந்த பள்ளியில் தன்னைப் போன்றே மேலும் சில ஆசிரியர்கள் உள்ளதாகவும். அவர்களும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து போலீசார் ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்தனர். ராஜகோபாலன் மீது 12  Red with 11 I, II, III, IV போக்சோ சட்ட, 354(A), 509, 67, 67(A It act) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை ஜூன் 8 ம்தேதி வரை  நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அப்துல் பரூக் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.