ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் மற்றும் கோட்ரேஜ் கன்ஸ்யூமர் நிறுவனங்கள் தமது சோப் பிராண்ட்களின் விலையைக் குறைத்துள்ளன. மூலப் பொருட்கள் விலை குறைந்துள்ளதால் இந்த விலை குறைப்பு சாத்தியமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாமாயில் மற்றும் இன்னும் பிற மூலப் பொருட்களின் விலை குறைந்துள்ளதால் சோப்புகளின் விலை 13 முதல் 15 சதவீதம் வரை குறைந்துள்ளது. லைஃப்பாய், லக்ஸ் சோப்பு விலைகள் இந்தியாவின் மேற்கு பிராந்தியங்களில் 5 முதல் 11 சதவீதம் வரை குறைந்துள்ளது. கோட்ரேஜ் நிறுவனத்தின் கோட்ரேஜ் நம்பர் 1 சோப்பின் விலை 13 முதல் 15 சதவீதம் வரை குறைந்துள்ளது.


இந்த விலை குறைப்பானது நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் விற்பனையை அதிகரிக்க உதவும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். பணவீக்க உயர்வால் தேவை சற்று குறைந்துள்ள நிலையில் விலை குறைப்பு விற்பனை மந்த நிலையை சீர் செய்யும் என்று கணிக்கப்படுகிறது.


இந்த விலை குறைப்புக்கு முக்கியக் காரணம் சர்வதேச அளவில் பாமாயில் விலையும் மற்ற மூலப் பொருட்கள் விலையும் குறைந்துள்ளது தான். கோட்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடட் நிறுவனத்தில் சீஃப் ஃபினான்சியல் ஆஃபீசர் சமீர் ஷா கூறுகையில், மூலப் பொருட்கள் விலை குறைந்த நிலையில் ஜிசிபிஎல் தான் முதன் முதலாக சோப்பு விலையைக் குறைத்து வாடிக்கையாளர்கள் நலனை முன்னிறுத்தியுள்ளது. சோப்பு விலையை நாங்கள் 13 முதல் 15 சதவீதம் குறைத்து இருக்கிறோம். 100 கிராம் நிகர எடை கொண்ட சோப்புகள் 5 எண்ணம் கொண்ட கோட்ரேஜ் நம்பர் 1 சோப் பேக்கை நாங்கள் ரூ.140க்கு விற்றுவந்தோம். இப்போது அதன் விலையை ரூ.120 ஆகக் குறைத்துள்ளோம்.


இதேபோல் ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அளித்த பேட்டியில் லைஃப்பாய், லக்ஸ் சோப்புகளின் வ்லையை மேற்கு பிராந்தியத்தியத்தில் குறைத்துள்ளது. மற்ற பிராந்தியங்களிலும் விரைவில் கணிசமான அளவு விலை குறைக்கப்படும் என்றார்.


ஆனால், ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் மற்ற பொருட்களான சர்ஃப், ரின், வீல் மற்றும் டவ் ஆகியனவற்றின் விலை குறைப்பு பற்றி ஏதும் முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறினார். ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் விலை குறைப்பு குறித்து எடல்வீஸ் நிதி சேவைகள் நிறுவனத்தின் எக்ஸிக்யூடிவ் வைஸ் பிரசிடென்ட் அப்னீஷ் ராய் கூறுகையில், ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடட் நிறுவனத்தின் இந்த விலை குறைப்பு வரவேற்கத்தக்கது. இது சந்தையை தக்க வைத்துக் கொள்ள உதவும். மேலும் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியிலும், அடுத்த நிதியாண்டின் தொடக்கத்திலும் விற்பனையை அதிகரிக்க உதவும். கடந்த ஓராண்டில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடட் நிறுவனத்தின் சோப்புகள் எடை குறைப்பு மற்றும் விலை உயர்வால் விற்பனையில் சுணக்கம் கண்டன. இப்போது மூலப் பொருட்கள் விலை குறைவால் கிராம் அதிகரித்து விலை குறைந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றார்.