தருமபுரி மாவட்ட பாஜக சார்பில் தருமபுரி, இண்டூர், பாப்பாரப்பட்டி ஆகிய இடங்களில் பாஜக மண்டல கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக பழைய தருமபுரியில் மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது பேசிய அமைச்சர் "தமிழ்நாடு பெருமை வாய்ந்த கலாச்சாரங்களை கொண்ட மாநிலம். 

தருமபுரி மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தை செயல்படுத்துவதற்கு கடந்த ஆண்டு மட்டும் மத்திய அரசு 58 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் நிவாரண பணிகளுக்காக தருமபுரி மாவட்டத்திற்கு மட்டும் மத்திய அரசு ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. சுகாதாரத் துறையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தருமபுரி மாவட்ட மக்கள் இத்திட்டங்கள் மூலம் பயன் பெற்று வருகின்றனர். சுகாதாரத் துறையில் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து பல்வேறு திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.

 

இந்நிலையில் தமிழக அரசு மத்திய அரசு நிதியில் ஒதுக்கும் திட்டங்களில் பிரதமர் படத்தையும், மத்திய அரசு சின்னங்களையும் வெளியிடுவதில்லை. சுகாதார திட்டங்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளியிடப்படும் விளம்பரங்களில் தமிழ்நாட்டுக்கு 24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒரு திட்டத்தில் கூட பிரதமர் படமும், மத்திய அரசு சின்னங்களும் வெளியிடப்படவில்லை. இதேபோன்று தருமபுரி மாவட்டத்திற்கும் இந்த விழிப்புணர்வு பணிக்காக 68 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இங்கு வந்து பார்த்தாலும் அந்த விழிப்புணர்வு விளம்பரங்களில் மத்திய அரசு நிதி என்றும் குறிப்பிடப்படவில்லை, பாரத பிரதமரின் புகைப்படமும் இடம்பெறவில்லை. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இனிவரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் அலுவலர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கோவிட் தொற்று பரவல் காரணமாக பணிகள் தடைப்பட்டது. மத்திய அமைச்சரவை இதற்காக நிதியை ஒதுக்கியது. இப்போது மறு மதிப்பீடு செய்யப்பட்டு,  தற்போது 1977 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளி பணிகள் நடைபெற்று வருகிறது. தற்காலிகமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பிஎஸ் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று, வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  2026 ஆம் ஆண்டுக்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடையும் என அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.