இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனைத்து ஏடிஎம்களிலும் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண இடைமுகம் (Unified Payments Interface-UPI) மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதை உறுதி செய்ய முன்மொழிந்துள்ளது. 2022-23 நிதியாண்டிற்கான தனது முதல் நிதிக் கொள்கை அறிக்கையில், "UPIஐப் பயன்படுத்தி அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் நெட்வொர்க்குகள் முழுவதும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை இப்போது அறிமுகம் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது" என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.


கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியின் கீழ், ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும் போது வாடிக்கையாளர் தனது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தத் தேவையில்லை.


இந்த செயல்முறை எவ்வாறு செயல்படும் என்பதில் தெளிவு இல்லை என்றாலும், ATMகளில் UPI ஐப் பயன்படுத்தி பணம் எடுப்பதற்கான தேர்வை ஏடிஎம்கள் விரைவில் காண்பிக்கும் என்று இந்தியாவின் அக்சென்ச்சர் நிறுவனத்தின் நிதிச் சேவைகள் பிரிவின் தலைவர் சோனாலி குல்கர்னி தெரிவித்துள்ளார்.


சோனாலி குல்கர்னி, கார்டு இல்லாமல் UPI மூலம் பணம் எடுப்பது எப்படி என்பது பற்றிய சில காட்சிகளையும் விளக்கியுள்ளார்.


ஆப்ஷன் 1:


வாடிக்கையாளர் ஏடிஎம் மையத்தில் தனது விவரங்களை உள்ளிடுகிறார் உடனே ஏடிஎம் QR குறியீட்டை உருவாக்குகிறது. வாடிக்கையாளர் UPI பயன்பாட்டைப் பயன்படுத்தி QR குறியீட்டை ஸ்கேன் செய்து கோரிக்கையை அங்கீகரிக்கிறார்.ஏடிஎம் பணத்தை வழங்குகிறது.


ஆப்ஷன் 2:


ஏடிஎம் மையத்தில் UPIஐடி மற்றும் பணம் எடுக்கும் தொகையை பயனர் உள்ளிடுகிறார். பயனர் செல்போன் பயன்பாட்டின் வழியாகத் தனது UPI கோரிக்கையைப் பெறுகிறார், ஏற்கனவே இருக்கும் UPI ஆப்ஸின் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கிறார்.வெற்றிகரமான அங்கீகாரத்திற்குப் பிறகு, ஏடிஎம்மில் பணம் வழங்கப்படுகிறது.


தற்போது ஏடிஎம் மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது ஒரு சில வங்கிகளில் மட்டுமே உள்ளது. பாரத ஸ்டேட் வங்கி (SBI), ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ஆகியவை இந்த வசதியை வழங்குகின்றன.


”ரொக்கமில்லா ஏடிஎம்களில் பணம் எடுப்பது பயனர்களின் எண்ணிக்கையைக் கண்டறியும், மற்றபடி டெபிட் கார்டுகளின் பயன்பாடு இதனால் பாதிக்கப்படாது அதன் வளர்ச்சியும் நிலையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். டெபிட் கார்டுகளில் ஏடிஎம் பயன்பாடுகள் தவிர வேறு பல பயன்பாடுகள் இருப்பதால் அவை காலாவதியாகிவிட வாய்ப்பில்லை - உதாரணத்துக்கு வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளை இயக்குதல் மற்றும் ஒருவரின் தொலைபேசி அணைக்கப்படும்போது அல்லது மொபைல் இணைய இணைப்பு மோசமாக இருக்கும் இடங்களில் ஏடிஎம் பணத்தை எடுப்பதை இயக்குதல் போன்றவை டெபிட் கார்டுகளில் சாத்தியப்படும் “ என சோனாலி குல்கர்னி கூறினார்.