கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஓசூர். கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் இருந்து ஒருமணி நேர இடைவெளியில் அமைந்துள்ளதால், ஓசூரும் வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. ஓசூரில் பல்வேறு தொழிற்சாலைகளை அமைக்கும் பணியை கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.


ஓசூரில் சுற்றுசு்சூழலுக்கு மாசு விளைவிக்காத எலக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரிபாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு இ- ஸ்கூட்டர்களுக்கான உதிரிபாங்கங்கள் தயாரிப்பதற்காக முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.




ஓலா, அதேர், ஸ்ரீவாரு மோட்டார்ஸ், சிம்பிள் எனர்ஜி ஆகிய நிறுவனங்களுடன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உதிரிபாகங்கள் தயாரிப்பதற்காக தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி, ஓசூரில் இந்த நிறுவனங்கள் தங்களது உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.


ஆம்பேர் நிறுவனம் ராணிப்பேட்டையில் உதிரிபாகங்கள் தயாரிப்பதற்காக ரூபாய் 700 கோடியை முதலீடு செய்துள்ளது. ஓலா நிறுவனம் ரூபாய் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாயை இந்த உதிரிபாகங்கள் தயாரிப்பு பணியில் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. ஓசூர் நகரத்தில் கடந்த சில வருடங்களாகவே தொழில்துறை வளர்ச்சிக்காக மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.


ஓசூர் வளர்ந்து வரும் நகரம் என்பதாலும், பெங்களூருக்கு மிக அருகில் இருப்பதாலும் தொழில் முதலீட்டாளர்கள் பலரும் இங்கு முதலீடு செய்ய விரும்புகின்றனர். இதுமட்டுமின்றி ஓசூரை சுற்றியுள்ள கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு போதுமான நில வசதியும் உள்ளது. பல்வேறு புதிய தொழிற்சாலைகளும் இந்த பகுதிகளில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.


ஓசூரில் வாகன தொழிற்சாலைகள் மட்டுமின்றி அந்த பகுதியில் ரோஜாப்பூக்களின் விளைச்சலும் அமோகமாக உள்ளது. இதன்காரணமாக, அந்த பகுதியில் வாசனைத் திரவிய தொழிற்சாலை ஒன்றும் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் தற்போது வளர்ந்து வரும் தொழில்மையமாக ஓசூர் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் விலை ரூபாய் 100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிப்பட்டனர். இதன்காரணமாக, நாட்டில் பலரும் சைக்கிள்களும், மிதிவண்டிகள் பயன்பாட்டிற்கும் மாறி வருகின்றனர். மிதி வண்டிகள் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பயன்பாட்டை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஊக்குவித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பெட்ரோல் மீதான வரியை ரூபாய் 3 குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


ABP EXCLUSIVE: வியர்வையில் சார்ஜ் ஆகும் பேட்டரி - தமிழ் விஞ்ஞானி குருநாதனுடன் நேர்காணல் (பகுதி - 2)