தற்போதுதான் தியேட்டர்கள் செயல்பட தொடங்கி இருக்கின்றன. ஒவ்வொரு துறைக்கும் ஒருவிதமான இழப்பு என்றால் தியேட்டர் துறையில் பெரும் இழப்பு. சினிமாக்களாவது ஓ.டி.டி.யில் வெளியிடும் சூழல் இருந்தது. ஆனால் தியேட்டர்கள் இழந்த பிஸினஸ் அவ்வளவுதான்.


இந்தியாவில் மிகப்பெரிய தியேட்டர் குழுமம் பிவிஆர். இந்த நிறுவனத்தின் வசம் 846 திரைகள் (71 நகரங்களில்) உள்ளன. பெரும்பாலான மெட்ரோ நகரங்களில் உள்ள பிவிஆர் தற்போது அடுத்தட்ட கட்ட நகரங்களுக்கு செல்ல தொடங்கி இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு பிவிஆர் எப்படி தொடங்கியது என்னும் செய்தியை படிக்க நேர்ந்தது. திரைப்படத்துக்கு உரிய கதை பிவிஆர் வளர்ச்சியில் இருக்கிறது.


பிவிஆர் குழுமத்தின் தலைவர் அஜய் பிஜிலி. பஞ்சாபை சேர்ந்தவர் ஆனால் பிறந்து வளர்ந்தது அனைத்துமே டெல்லிதான். இவரது தாத்தா லாலா செயின் தாஸ் 1939-ம் ஆண்டுகளில் அமிர்தசரஸ் டிராஸ்போர்ட் கார்ப்பரேஷன் என்னும் நிறுவனத்தை நடத்திவந்தார். இவருக்கு மூன்று மகன்கள். இவர் இறந்தவுடன் இவரது அனைத்து பிஸினஸ்களும் மூன்றாவது மகனான அஜய் பிஜிலியின் அப்பாவுக்கு வந்துவிட்டது. குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் சரியில்லாததால் மூன்றாவது மகனுக்கு தொழில் கிடைக்குமாறு உயில் எழுதிவிட்டார்.




1961-ம் ஆண்டு வரை பஞ்சாபில் மட்டுமே செயல்பட்டுவந்த டிரான்ஸ்போர்ட் தொழிலை டெல்லிக்கு விரிவு படுத்த நினைக்கிறார். இவர் டெல்லிக்கு வந்த பிறகுதான் 1967-ம் ஆண்டு அஜய் பிஜிலி பிறக்கிறார். டெல்லியில் உள்ள மாடர்ன் பள்ளியில் படித்தார். வெளிநாட்டுக்கு கல்லூரி படிப்பை வெளிநாட்டுக்கு சென்று படிக்கவேண்டும் என்பது அஜயின் ஆசை. ஆனால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே ஹிந்து கல்லூரியில் படிக்கிறார். நினைத்த படிப்பு படிக்க முடியவில்லை என்றாலும் வீட்டின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற பிள்ளையாகவே வளர்கிறார்.


இவரது அப்பா இளமை காலத்தில் செலவாளி இல்லை, நல்ல பிள்ளை, சூழ்நிலைக்கு ஏற்ப  முடிவெடுக்கும் திறன் இருந்ததால் தாத்தாவுக்கு பிறகு அப்பாவுக்கு பிஸினஸ் கிடைத்தது. அதனால் அப்பாவின் பெயருக்கு களங்கம் இல்லாதாவாறு செயல்படுகிறார். வெளிநாட்டுக்கு சென்றால் திரும்பி வரமாட்டேன் என என் பெற்றோர் கருதினார்கள் என தெரிவித்திருக்கிறார். அதனால் குடும்ப தொழிலான டிரக் பிஸினஸில் (1988) இறங்கினார்.




ஆனால் திருமண விஷயத்தில் அஜய் விரும்பிய படியே காதல் திருமணம். பள்ளியில் படிக்கும்போது சீனியர் மாணவியை காதலித்து கரம்பிடித்தார். 1990களில் திருமணம் நடக்கிறது. 92-ம் ஆண்டு குழந்தை பிறக்கிறது. அதே ஆண்டில் இவரது அப்பாவும் இறக்கிறார்.


எதிர்பாராத நேரத்தில் இறந்ததால் செய்வதறியாமல் குடும்பம் தடுமாறுகிறது. அப்பா இறக்கும் வரையில் குடும்பத்துக்கு என ஒரு தியேட்டர் இருந்தது அதில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். இறப்புக்கு பிறகு டிரக் பிஸினஸ் மற்றும் தியேட்டரை கவனித்துக்கொள்ள வேண்டிய சூழல்.


டிரக் தொழிலில் இருந்த இவரது குடும்பத்துக்கு தியேட்டர் வந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. டெல்லியில் வசந்த் விஹாரில் பிரியா சினிமாஸ் என்னும் தியேட்டர் இருந்தது. இந்த தியேட்டர் உரிமையாளர்களுக்குள் சச்சரவு ஏற்பட்டிருக்கிறது. அப்போது முக்கிய பிரமுகராக இருந்த இவரது அப்பாவிடம் பிரச்சினை தீர்க்க சொல்லி நிறுவனர்கள் பேச்சு வார்த்தைக்கு வருகின்றனர். பல விதமான தீர்வுகளில் எந்த ஒரு தீர்வுக்கும் பார்ட்னர்கள் அனைவரும் உடன்படவில்லை. அதனால் விரக்தியில் நானே வாங்கிக்கொள்கிறேன் என்று கூறியவுடன் அனைவரும் உடன்படவே தியேட்டர் பிஸினஸ் இவர்களுக்கு குடும்பத்துக்கு வந்திருக்கிறது. (கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தியேட்டர் மறுசீரமைப்பு செய்யப்பட்டது)


அப்பா மறைவுக்கு முன்பு தியேட்டர் பிஸினஸில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அஜய் அப்பாவின் மறைவுக்கு பிறகு இரு தொழில்களிலும் கவனம் செலுத்த தொடங்கினார். ஆனால் இவரது மனம் முழுவதும் தியேட்டரிலே இருந்தது.




இந்த நிலையில் 1994-ம் ஆண்டு ட்ரக் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வேர் ஹவுஸில் பெரும் தீ. உயிர் இழப்புகள் இல்லை என்றாலும் பெரும் பொருள் இழப்புகள். காப்பீடு செய்யப்பட்டிருந்தாலும் போதுமான அளவுக்கு இல்லை. அப்பா இருந்திருந்தால் அனைத்துக்கும் பொறுப்பேற்று இழப்பீடுகள் வழங்கி இருப்பார் என அம்மா கூறவே சொந்த பணத்தில் இழப்பீடு கொடுத்தார்.


அப்பாவுடன் தொழிலில் இருந்த அம்மாவின் சகோதரிடம் ட்ரக் தொழிலை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு அஜய் தியேட்டர் தொழிலுக்கு வருகிறார்.


1990களில் வெளிநாட்டில் மல்டிபிளெக்ஸ் வந்துவிட்டது. ஆனால் இந்தியாவில் சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்கள் மட்டுமே இருந்தன. அதுவும் சவுண்ட், திரை , அனுபவம் என பல வகைகளில் மோசமாகவே இருந்தது. இதற்கு செலவு செய்ய தயாராக இருந்தாலும் விலைக்கட்டுப்பாடுகள் இருந்ததால் (இப்போதும் தமிழ்நாட்டில் உண்டு) செய்த செலவினை மீட்க நீண்ட காலம் ஆகும் என்பதால் பழைய தியேட்டராகவே இருந்தது.


குறைந்த செலவு செய்து தியேட்டரை புதுப்பித்தார் அஜய். அப்போது டெல்லியில் 60-க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இருந்தன. ஆனால் அவை அனைத்தும் இந்தி படங்களுக்கு முக்கியத்தும் கொடுத்தன. மும்பையில் உள்ள வார்னர் பிரதர்ஸ், சோனி, எம்ஜிஎம் உள்ளிட்ட அலுவலங்களுக்கு சென்று ஹாலிவுட் படங்களை திரையிடுவதற்கு பேச்சு வார்த்தை நடத்தி ஆங்கில படங்களை வெளியிட்டார்.


 




டால்பி சிஸ்டம் மற்று ஹாலிவுட் படங்கள் என்பதால் எப்போதும் கூட்டம் நிறைந்தே இருந்தது. இதனை மேலும் அதிகமாக்க தியேட்டர் பராமரிப்புக்கு தொடர்ந்து செலவு செய்தார். இதனால் ஹாலிவுட் நிறுவனங்களிடம் நல்ல தொடர்பு உருவாது. இந்தியாவில் வெளிநாட்டு சினிமாவுக்கு பெரிய வாய்ப்பு இருப்பதாக கருதிய தயாரிப்பு நிறுவனங்கள் ஆஸ்திரேலிய நிறுவனமான வில்லேஜ் ரோட்ஷோ நிறுவனத்தின் தொடர்பை அஜய்க்கு ஏற்படுத்தி கொடுத்தன.


ஆஸ்திரேலியாவை சேர்ந்த தியேட்டர் நிறுவனம் வில்லேஜ் ரோடுஷோ.( Village Roadshow). ஆசியாவில் விரிவாக்க செய்தது. தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் விரிவாக்கம் செய்தது. ஆனால் இந்தியாவில் சரியான பார்ட்னரை தேடியது. இந்தியாவில் உள்ள சிக்கலை அதிகம் என்பதால் சரியான பார்ட்னரை தேடியது. வரி, விலை நிர்ணயம், மொழி என விஷயங்களை கையாளும் திறன் கொண்ட நிறுவனத்தை தேடியது.


இரு நிறுவனங்களுக்கும் இடையே சரியான புரிதல் இருந்ததால் பிவிஆர் உருவானது (Priya Village Roadshow). அஜய்க்கு 60 சதவீத பங்கும். வில்லேஜ் நிறுவனத்துக்கு 40 சதவீத பங்கும் முடிவானது. ஒரு கோடி டாலரை 1996-ம் ஆண்டு முதலீடு செய்தது வில்லேஜ் ரோடுஷோ.


முதலீடு கிடைத்தது தொடர்ந்து விரிவாக்கம் செய்தது 2001-ம் ஆண்டு டெல்லியில் 12 திரைகள் கொண்ட குழுமமானது. 2001-ம் ஆண்டு அமெரிக்கா தாக்குதலுக்கு பிறகு வெளிநாடுகளில் உள்ள பிஸினஸ்களை விலக்கிகொள்ள வில்லேஜ் ரோடுஷோ முடிவெடுத்தது. நீங்கள் நல்ல பார்னர் என்றாலும் சில பிராந்தியங்களில் இருந்து வெளியேற முடிவெடுத்திருக்கிறோம் என கூறப்பட்டது.


மீண்டும் பார்ட்னரை தேடும் சுழல் உருவானது. ஐசிஐசிஐ வென்ச்சர் நிறுவனம் முதலீடு செய்ய முடிவெடுத்தது. 40 சதவீத பங்குகளை ஐசிஐசிஐ வாங்கியது. ஆனால் பிவிஆர் என்னும் பெயர் தொடர்ந்தது. ஐசிஐசிஐ முதலீட்டுக்கு பிறகு விரிவாக்க பணிகளில் கவனம் செலுத்தியது பிவிஆர். 2001-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில்தான் இந்தியாவில் மால்கள் வரத்தொடங்கியது. அதனால் ஒவ்வொரு மால்களிலும் பிவிஆர் இருந்தது. 2006-ம் ஆண்டு பிவிஆர் நிறுவனத்தின் ஐபிஓ வெளியானது. ஐசிஐசிஐ கணிசமான பங்குகளை விற்றது.


இதன் வெற்றியை தொடர்ந்து பிவிஆர் பிக்சர்ஸ் தொடங்கப்பட்டது. சில படங்கள் வெற்றி பெற்றாலும் அந்த பிரிவில் பெரும் சரிவை சந்திதது பிவிஆர். 2018-ம் ஆண்டு சென்னையில் உள்ள சத்யம் குழுமத்தின் பெரும்பான்மையான பங்குகளை பிவிஆர் வாங்கியது.


1000 திரைகளை நோக்கி சென்றுகொண்டிருந்த பிவிஆரின் வேகத்துக்கு கொரோனா முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. இந்த சிக்கலில் இருந்து மீண்டு வருமா, ஓடிடியின் வேகத்துக்கு ஈடுகொடுக்குமா ? சராசரியாக ஒர் ஆண்டுக்கு 145 கோடி டிக்கெட் விற்றிருக்கிறது பிவிஆர். வரும் காலத்தில் இந்த எல்லையை தொடுமா? கோவிட்டுக்கு முன்பை விட தற்போது பாதியாக பங்கு வர்த்தகமாகி வருகிறது? முதலீட்டாளர்களின் விருப்ப பங்காக மாறுமா என பல கேள்விகளுக்கான பதிலை பிவிஆர் தேடிவருகிறது