அட பழச திரும்பிப் பார்க்காதீங்க என்று சமீரா ரெட்டி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அட்வைஸ் நிச்சயமாக மகிழ்ச்சிக்கான ரகசியம் திறவுகோல் என்றால் அது மிகையல்ல.


தமிழில் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து பிரபலமான சமீரா ரெட்டி. அதன்பின்னர் அஜித்குமாருடன் அசல், விஷாலுடன் வெடி, ஆர்யாவின் வேட்டை ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்து இருக்கிறார். 2014-ல் தொழில் அதிபர் அக்‌ஷய் வர்டேவை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு சமீரா ரெட்டி படங்களில் நடிக்கவில்லை. இவரும் இவரது மாமியாரும் இணைந்து வீட்டில் நடக்கும் சமையல் பற்றி வெளியிடும் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை. அதேபோல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவ்வப்போது சில சுவாரஸ்யமான புகைப்படங்களையும் தகவல்களையும் அவர் வெளியிடுவது வழக்கம்.


திருமணம் தொடங்கி குழந்தைப் பேறு வரை அவரது பளீர் கருத்துகள் மிகவும் பிரபலம். திருமணம் பற்றி அவசரமாகவோ பயந்தோ எந்த முடிவும் எடுத்துவிடக்கூடாது என்று அவர் வெளியிட்டிருந்த கருத்தும் கவனம் பெற்றது.




அதேபோல் பெண்களுக்கு குழந்தைப் பேறால் ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்ஸ் குறித்து "டியர் ஸ்ட்ரெச் மார்க்ச், நான் உன்னைப் பார்த்து பயந்திருக்கிறேன். உனை வெறுத்திருக்கிறேன். நீ எனக்கு வந்து சேர்ந்த நாள் எனக்கு அச்சத்தைத் தந்தது. ஆனால், நான் உனைத் தழுவிக் கொண்ட நாளில் நான் உனை எனது கவசம்போல் உடுத்திக்கொள்கிறேன். உனை நான் நேசிக்கிறேன். நான் புலியின் கோடுகளைப் போல் உனைப் பெருமித அடையாளமாகக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்த கருத்தும் பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தது.


அந்த வகையில் தற்போது உடலில் ஏற்படும் மாற்றங்கள், வயதால் ஏற்படும் தோற்றப் பொலிவின் குறைபாடு ஆகியனவற்றால் பலரும் மன அழுத்தம் கொள்ளும் நிலையில் தோற்றத்தைப் பற்றிய அவரது கருத்து மிகவும் முக்கியமானது என்றே கூறலாம். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நீங்கள் உங்களின் தற்போதைய தோற்றத்தையும் பழைய தோற்றத்தையும் எப்போதுமே ஒப்பிட்டுக் கொள்கிறீர்களா? அப்படியென்றால் அந்தப் பழக்கத்தை உடனே மாற்றி அமையுங்கள். அதுவே நீங்கள் உங்களுக்கும் உங்கள் மனதுக்கும் செய்யக் கூடிய மிகப் பெரிய ஆரோக்கிய உபகாரம். பழசை நினைத்து அதிலேயே தேங்கிவிடாதீர்கள். நீங்கள் எப்படி இருந்தாலும் உலகம் உங்களை எடை தூக்கிப் பார்த்துக் கொண்டே தான் இருக்கும். அதனால் பழசை விட்டுங்க முன்னேறிச் செல்லுங்கள். எப்போதும் திரும்பிப் பார்க்காதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.


இந்தக் கருத்தின் கீழ் அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் ஒருபுறம் அவருடைய தறோதைய தோற்றமும் இன்னொரு புகைப்படத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு திரை நட்சத்திரமாக அவர் ஜொலித்த புகைப்படமும் இடம்பெற்றுள்ளன. இப்போது உள்ள புகைப்படத்தில் மேக்கப் தான் இல்லை. ஆனால் சமீராவின் ட்ரேட் மார்க் சிரிப்பு அழகுக்கு அழகு சேர்க்கிறது.