Share Market Adani: ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையின் எதிரொலியாக, அதானி குழுமத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.
அதானி குழுமம் - ரூ.53,000 கோடி இழப்பு
பங்குச் சந்தையில் பங்குஜ்களின் சரிவால், அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ரூ.53 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழும நிறுவன பங்குகள் விலை 17 சதவிகிதம் வரை சரிந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்குகள் விலை 7 சதவிகிதம் சரிந்து ரூ.1,656-க்கு வர்த்தகமானது. அதானி வில்மர் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவன பங்குகளின் விலை 3 சதவிகிதம் வரை சரிந்தது. அதானி டோட்டல் கேஸ் நிறுவன பங்குகள் 13 சதவிகிதம் வரை சரிந்து ரூ.753-க்கு குறைந்தது. என்டிடிவி நிறுவன பங்குகளின் மதிப்பு 11 சதவிகிதம் குறைந்து ரூ.186.15 ஆக வீழ்ந்தது. அதானி பவர் நிறுவன பங்குகளின் விலை 4 சதவிகிதமும் சரிந்தது. அதிகபட்சமாக அதானி எனர்ஜி சொல்யூசன் நிறுவனத்தின் பங்குகள் 17.06 சதவிகிதம் வரை சரிந்து, ரூ.915.70-க்கு விற்பனையானது. இன்று காலை வணிகம் தொடங்கியதும் அதானி பங்குகள் சரிவைச் சந்தித்தாலும், அது மெல்ல மெல்ல தற்போது எழுச்சி கண்டு வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பங்குச்சந்தை சரிவு:
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 424 புள்ளிகள் சரிந்து, 79 ஆயிரத்து 281 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 153 புள்ளிகள் குறைந்து 24 ஆயிரத்து 213 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
குற்றச்சாட்டும், கடந்த கால இழப்பும்:
ஹிண்டர்ன்பர்க் வெளியிட்ட அறிக்கையில், “அதானி குழும முறைகேட்டிற்குப் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் தலைவர் (SEBI) மாதபி புச்சுக்கு சொந்தமான பங்குகள் இருந்தன. முறைகேட்டில் உடந்தை என்பதனாலேயே அதானி முழுமம் மீது செபி தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை” என குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், செபி தலைவர் மாதபி புச் மற்றும் அதானி குழுமம் சார்பில் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. முன்னதாக கடந்த ஆண்டு ஹிண்டர்ன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டுகளில், அதானி குழுமம் சந்தை மூலதன மதிப்பில் 6 லட்ச கோடி ரூபாயை இழந்தது குறிப்பிடத்தக்கது.