Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் கடைசி நேரத்தில் ஒரு தங்கப் பதக்கம் வென்று, பதக்கப் பட்டியலில் அமெரிக்க முதலிடத்தை பிடித்தது.

பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்:

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. சர்வதேச அரங்கில் திறமையை வெளிப்படுத்தி பதக்கம் வென்றிட வேண்டும் என, 11 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். ஆனால், இந்தமுறையும் வழக்கம்போல வல்லரசு நாடுகளே பதக்கப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. குறிப்பாக முதலிடத்திற்கு அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், கடைசி நாளில் நடைபெற்ற மகளிருக்கான கூடைப்பந்து போட்டியில், நடப்பாண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்திய ஃபிரான்ஸ் அணியை வீழ்த்தி அடுத்தடுத்து தங்கப் பதக்கம் வென்றது. இதன் மூலம் அமெரிக்கா பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

முதல் 3 இடங்கள் யாருக்கு?

40 தங்கம், 44 வெள்ளி  மற்றும் 42 வெண்கலம் என மொத்தம் 126 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் 100-க்கும் அதிகமான பதக்கங்களை வென்ற ஒரே நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது. அதேநேரம், சீனா 40 தங்கம் உட்பட 91 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவிற்கு நிகரான தங்கப் பதக்கங்களை வென்று இருந்தாலும், வெள்ளி பதக்கங்களில் பின் தங்கியதால் சீனா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனிடையே, 20 தங்கம் உட்பட 45 பதக்கங்களுடன் ஜப்பான் 3வது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியை நடத்திய ஃப்ரான்ஸ் நாடு, 16 தங்கம் உள்ளிட்ட 64 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 5வது இடத்தை பிடித்தது.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 பதக்கப் பட்டியல்:

வ.எண் நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 அமெரிக்கா 40 44 42 126
2 சீனா 40 27 24 91
3 ஜப்பான் 20 12 13 45
4 ஆஸ்திரேலியா 18 19 16 53
5 ஃப்ரான்ஸ் 16 26 22 64
6 நெதர்லாந்து 15 7 12 34
7 இங்கிலாந்து 14 22 29 65
8 தென்கொரியா 13 9 10 32
9 இத்தாலி 12 13 15 40
10 ஜெர்மனி 12 13 8 33

இந்தியாவின் நிலை என்ன?

கடந்த ஒலிம்பிக் போட்டிகளை காட்டிலும் கூடுதல் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன், 100-க்கும் அதிகமான இந்திய வீரர், வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக்கில் களமிறங்கினர். ஆனால், அவர்கலால் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டமுடியவில்லை. குறிப்பாக, நிச்சயம் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நீரஜ் சோப்ராவால் கூட வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே பெற முடிந்தது. இதன் மூலம், ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்கள் என, 6 பதக்கங்களை வென்ற இந்தியா பதக்கப் பட்டியலில் 71வது இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் கிடைத்த நிலையில், இந்த முறை அதைவிட குறைவான பதக்கங்களே கிடைத்துள்ளன. அதிலும், ஒரு தங்கம் கூட கிடைக்கவில்லை. பல போட்டிகளில் இந்தியர்கள் நான்காம் இடம் பிடித்து, நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்தனர்.

மகளிர் மல்யுத்த போட்டியில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய வினேஷ் போகத், கடைசி நேரத்தில் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பான மேல்முறையீடு மீதான தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான், ஒரே ஒரு தங்கப் பதக்கத்துடன் பட்டியலில் 62வது இடத்தில் உள்ளது. ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில், 32 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானை காட்டிலும் கீழே இந்தியா சரிந்துள்ளது.