சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) மொத்த வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 18 சதவீதம் உயர்ந்து இந்த ஆண்டு அக்டோபரில் ரூ. 1,51,718 கோடியாக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் குறித்த புள்ளி விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.51,718 கோடியைத் தாண்டியுள்ளது தெரியவந்துள்ளது.


ஜிஎஸ்டி வரி வசூல் இவ்வளவு பெரிய தொகையை தாண்டுவது இது இரண்டாவது முறையாகும்.
முன்னதாக இதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஜிஎஸ்டி வசூல் 1.68 லட்சம் கோடியாக இருந்தது. அதே சமயம், தொடர்ந்து 8வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.


கடந்த மாதம் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,51,718 கோடியாகவும், அக்டோபர் மாதத்தில், சிஜிஎஸ்டி ரூ.26,039 கோடியாக இருந்தது. அதே நேரத்தில், எஸ்ஜிஎஸ்டி ரூ.33,396 கோடியாகவும், ஐஜிஎஸ்டி ரூ.81,778 கோடியாகவும் (பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலான ரூ. 37,297 கோடி உட்பட), செஸ் ரூ.10,505 கோடியாகவும் (பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலான ரூ. 825 கோடி உட்பட) இருந்தது.


கடந்த ஆண்டு அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1,30,127 கோடியாக இருந்தது. அதே நேரத்தில், செப்டம்பர் 2022 இல் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,47,686 கோடியாகவும், இது கடந்த ஆண்டை விட 26 சதவீதம் அதிகமாகவும் உள்ளது.


மொத்த வரிவசூலில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அக்டோபரில் லடாக் 74% வரி வசூலை செய்துள்ளது. இதில் தமிழ்நாடு கடந்த ஆண்டு அக்டோபர் ஜிஎஸ்டி வரி வசூல் 7,642 கோடியாக இருந்த நிலையில் இந்த ஆண்டு அக்டோபரில் 9,540 கோடியாக ஈட்டியுள்ளது. இது 25% அதிகரிப்பாகும். கர்நாடகாவில் 33 % அதிகரித்துள்ளது. 






முன்னதாக, திருவனந்தபுரத்தில் தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் கலந்துகொண்டனர்.


அதை தொடர்ந்து, மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் தென் மண்டல கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் தலைமை வகித்த அமித்ஷாவுக்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பரிசு வழங்கினார். தொடர்ச்சியாக, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு  பூங்கொத்து வழங்கி மரியாதை செலுத்தினார்.


இதையடுத்து, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்கும் காலத்தை மத்திய அரசு மேலும் நீட்டிக்க வேண்டும் என தென்மண்டல கவுன்சிலில் முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய அவர், மின்வாரிய திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக்கு காற்றாலை மின்சாரத்தை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.