சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்தது பற்றி நடிகை திண்டுக்கல் தனம் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் ஜெய், சுவாதி, சமுத்திரகனி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான படம் “சுப்பிரமணியபுரம்”. ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த இப்படம் கல்ட் கிளாசிக் படங்களில் மிக முக்கியமான ஒன்று. ஒரு படம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற மரபை மீறி இன்று பார்த்தாலும் நட்பு, துரோகம், காதல், தடம் மாறும் இளைஞர்களின் வாழ்க்கை என சுப்பிரமணியபுரம் காட்டிய பாடங்கள் அதிகம். இதனாலேயே இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்த படத்தில் முக்கிய நடிகர்கள் தாண்டி ஊர் தலைவர் மொக்கசாமி, மைக்செட்டுக்காரர், அவரது மனைவி ராசாத்தி கேரக்டரில் நடித்தவர்களும் கவனிக்கப்பட்டனர். அந்த வகையில் ராசாத்தியாக நடித்த தனம் சுப்பிரமணியபுரம் படத்தின் நினைவுகளை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் “காதல் படத்தில் சந்தியாவுக்கு அத்தை கேரக்டரில் நடித்தேன். அந்த படத்தில் முதலில் தண்டபாணியின் 2வது மனைவி கேரக்டரில் தான் நடிக்க கூப்பிட்டார்கள். ஆனால் படத்தில் அவர் என்னை அடிக்கும் காட்சி இருக்கும். நான் இதுவரை யாரிடமும் அடி வாங்கியதில்லை என்பதால் அதில் நடிக்க மாட்டேன் என சொன்னேன். அதன் பிறகு சில ஆண்டுகளுக்குப் பின் ஒரு நாள் அலெக்ஸிடம் இருந்து போன் வந்தது. உடனடியாக பாரதிபுரம் கிளம்பி வரச்சொன்னார்.
அங்கு போனேன். சுமோ வண்டியில போய் இறங்கும் போது தாடியெல்லாம் வச்சிகிட்டு ஒருத்தர் கீழே இருந்து என்ன பாக்குறாரு. அங்க இருக்கவங்க இவர் தான் இயக்குநர் சசிகுமார்ன்னு சொன்னாங்க. எனக்கே மனசே வரல. இவரைப் பார்த்தா கேடி மாதிரி இருக்காருன்னு நினைச்சிகிட்டேன். ஆனால் சசிகுமாரோ என்னிடம் நாளைக்கு காலையில ஷூட்டிங் வந்துடுங்க என சொன்னார். சுமார் 10 நாட்கள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டேன். திருவிழா காட்சிகள் தான் முதல் காட்சி எடுத்தாங்க.
சாமி கும்பிட்டு கேமராவை பார்த்து சிரிக்க சொன்னாங்க. கடைசியில பார்த்தா நாட்டாமையை பார்த்து சிரிச்சதா காட்டிட்டாங்க. அப்புறம் அந்த “தோட்டம் கொண்ட ராசாவே..சூடிக் கொண்ட ராசாத்தி” பாடல் பின்னணியில் ஓடும் காட்சி 10 டேக் வாங்கினார் நாட்டாமையாக நடித்த இலைக்கடை முருகன். சொல்லப்போனால் எனக்கு என்ன கதை என்னென்ன கூட தெரியாது. நான் அங்க போகும் போது ஹே ராசாத்தி ராசாத்தி என துணைக் கதாபாத்திரத்தில் நடித்த டும்கான் உள்ளிட்டோர் பாடுவார்கள். அப்புறம் தான் மைக்செட் ராசாத்தி என்னோட பெயர்ன்னு தெரியும்.
அதேபோல் நாட்டாமையோட தனிமையில் இருக்கும் சீனில் நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன். என் பையன் வந்து நடிக்க வந்துட்டு ஏன் அசிங்கப்படுத்துறன்னு கேட்டான். அதேபோல் கஞ்சா கருப்புவும் நடிக்கப் போறீயா இல்லையா..சினிமாவே திரும்பி பார்க்க வைக்கும் என சொன்னவுடன் சசிகுமாரிடம் சாரி கேட்டுவிட்டு நடித்தேன். தியேட்டரில் அந்த காட்சியை முதல் நாள் முதல் ஷோவில் பார்க்கும் போது அனைவரும் கைதட்டி ரசித்த பின் தான் நம்பிக்கை வந்தது என தெரிவித்துள்ளார்.