புத்தாண்டு பல மகிழ்ச்சியான அனுபவங்களை நமக்குக் கொடுத்தாலும், தொடர்ந்து நடுத்தர மக்களைப் பாதிக்கும், பர்ஸை பதம் பார்க்கும் பல முக்கியமான பிரச்னைகளைத் தன்னுடன் கொண்டு வருகிறது. இன்று இந்தியா முழுவதும் டிஜிட்டல் சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதைப் பயன்படுத்த முடியாமல் இருக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளோம். இப்படி நம்முடைய வாழ்க்கையின் அங்கமாக மாறியுள்ள ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, சோமேட்டோ ஆன்லைன் டாக்ஸி சேலையான ஓலா, உபர் சேவைகளின் மீது மத்திய அரசு புதிதாக ஜஎஸ்டி வரி விதித்துள்ளது. இந்தியாவில் சொமேட்டோ , ஸ்விக்கி, ஓலா, உபர் போன்றவற்றில் ஆர்டர் செய்வதற்கு இனி வரும் நாட்களில் அந்த நிறுவனங்கள் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.


2022ம் ஆண்டு தொடங்கியதை முன்னிட்டு நேற்று முதல் புதிய ஜிஎஸ்டி விதிகள் அமலுக்கு வந்து இருக்கின்றன. பல்வேறு ஜிஎஸ்டி விதிகளில் வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக ஆன்லைன் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி தொடர்பாக பல்வேறு துறைகளில் வரிகளை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு துறையில் மூலப்பொருட்களின் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில்தான் நேற்றில் இருந்து இந்தியாவில் சொமேட்டோ , ஸ்விக்கி உள்ளிட்ட உணவு ஆர்டர் நிறுவனங்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இந்த 5 சதவிகித ஜிஎஸ்டி வரியை சோமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.



இதற்கு முன் உணவக நிறுவனங்கள் மட்டும் உணவு ஆர்டருக்கு பில்லில் 5 சதவிகித ஜிஎஸ்டி வரியை செலுத்தி வந்தது. இனி கூடுதலாக 5 சதவிகித ஜிஎஸ்டி வரியை சொமேட்டோ , ஸ்விக்கி நிறுவனங்கள் செலுத்த வேண்டும். எனவே இதனால் உணவு பொருட்களின் விலை இனி சொமேட்டோ , ஸ்விக்கியில் உணவு பொருட்களின் விலை 5 சதவிகிதம் கூடுதலாக இருக்கும். இதேபோல் டெலிவரி சார்ஜ், டிப்ஸ், பேக்கிங் சார்ஜ் ஆகியவற்றுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க உள்ளது உணவு டெலிவரி நிறுவனங்கள். இதனால் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் உணவின் விலை பெரிய அளவில் உயர போகிறது.


ஆன்லைன் தளத்தில் பல லட்சம் பதிவு செய்யப்படாத சிறிய மற்றும் பெரிய உணவகங்கள் உள்ளது. இதேபோல் பதிவு செய்யப்பட்ட உணவகங்கள் ஆன்லைன் ஆர்டர் கணக்குக் காட்டுவதன் மூலம் ஜிஎஸ்டி வரியைச் செலுத்தாத காரணத்தால் கடந்த 2 வருடம் மட்டும் சுமார் 2000 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம். இந்தப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்பதற்காகவே வாடிக்கையாளரிடம் இருந்து வரியை வசூல் செய்யும் வழக்கத்தைக் கொண்டு வந்தால் வரி ஏய்ப்பை குறைக்க முடியும் என அரசு நம்புகிறது. ஆனால் இதிலும் சில பிரச்னைகள் உள்ளது. உதாரணமாக டாமினோஸ், பிட்சா ஹட் போன்ற நிறுவனங்கள் தங்களது தயாரிப்பை தாங்களாகவே டெலிவரி செய்வது வழக்கம். இதற்கு 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இப்புதிய மாற்றத்தால் சொந்தமாக டெலிவரி செய்யும் ஆர்டர்களையும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தின் வாயிலாக டெலிவரி செய்தோம் என்று கணக்கு காட்ட முடியும்.



இதேபோல் ஓலா, உபர் போன்ற அனைத்து ஆன்லைன் தளத்தில் புக் செய்யப்படும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் சேவைக்கு இதுநாள் வரையில் எவ்விதமான வரியும் விதிக்கப்படாத நிலையில் தற்போது மத்திய அரசு 5 சதவீத ஜிஎஸ்டி வரியை விதிக்க முடிவு செய்துள்ளது. அதனால் இனி ஓலா, உபர் ஆகிய பிக் அப் டிராப் வாகன டாக்சி சேவைகளிலும் கூடுதலாக 5 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இதற்கு முன் ஜிஎஸ்டிக்கு வெளிப்பகுதியில் இருந்த இந்த நிறுவனங்கள் இனி ஜிஎஸ்டி வரையறைக்குள் வரும். இதனால் ஓலா, உபர் மூலம் கார், பைக் புக் செய்பவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைன் தளம் அல்லாமல் வெளியில் கிடைக்கும் ஆட்டோ-வை வாடகைக்கு எடுத்தால் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி கிடையாது.


ஜனவரி 1 முதல் ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விகிதமானது 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கலாம் என முன்னதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஜனவரி 1க்கு மேல் துணிகள் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் ஜவுளித்துறையினருக்கு நிம்மதி அளிக்கும் விதமாக இந்த முடிவு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி ஏற்றம் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.