திருமலை திருப்பதி கோவிலுக்கு கிடைக்கும் பக்தர்களின் உண்டியல் காணிக்கைகள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளை, திருமலை திருப்பதி தேவஸ்தானம், வங்கியில் முதலீடு செய்கிறது. அதன் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய் உள்ளிட்டவற்றை கொண்டு, தேவஸ்தான பணிகள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
உண்டியலில் பெறப்படும் தங்கம், நன்கொடையாக வழங்கப்படும் தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை நிரந்தர வைப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால் கிடைக்கும் வருவாயும் அதில் அடக்கம். அவற்றிக்கு ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டு வரும் நிலையில் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு, ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படவில்லை என்றாலும், அந்த லட்டு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களுக்கும், அறைகளின் வாடகை கட்டணத்தின் மீதும் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது.
அதனால், ஆண்டுக்கு, 120 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி.,யாக, தேவஸ்தானம் சார்பில் செலுத்தப்பட்டு வருகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு தார்மீக நிறுவனம் என்பதால் தேவஸ்தானத்திற்கு ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகளும், ஆந்திர அரசும், மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில், ஆந்திர மாநில எம்.பி., விஜயசாரதி ரெட்டி சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் பேசும் போது, பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்கும் தேவஸ்தானத்திற்கு ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், என கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'நாட்டில் பல முக்கிய கோவில்கள் இருப்பதாகவும் அவற்றிக்கு வழங்கப்படாத ஜி.எஸ்.டி., விலக்கை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மட்டும் வழங்க முடியாது,’ என திட்டவட்டமாக கூறியுள்ளார்.