GST Council: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம், வரும் டிசம்பர் 21ம் தேதி நடைபெற உள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 55வது கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் வரும் டிசம்பர் 21ம் தேதி நடைபெற உள்ளது. மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய இந்த கவுன்சில், உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளின் மீதான ஜிஎஸ்டி விகிதங்களை விலக்குவது அல்லது குறைப்பது உள்ளிட்ட முக்கிய வரிக் கொள்கை மாற்றங்கள் குறித்து விவாதிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
காப்பீட்டு திட்டங்கள் மீது எதிர்பார்ப்பு:
செப்டம்பர் 9 அன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்த பரிந்துரைகளை அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க அமைச்சர்கள் குழுவை (ஜிஓஎம்) கவுன்சில் வலியுறுத்தியது. கடந்த மாதம் நடந்த விவாதங்களைத் தொடர்ந்து, GoM குறிப்பிடத்தக்க மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. அதில்,
- டேர்ம் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகள் மற்றும் மூத்த குடிமக்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகியவற்றிற்கு செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு
- மூத்த குடிமக்கள் தவிர தனிநபர்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை
- கவரேஜில் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான பாலிசிகளுக்கான பிரீமியங்களுக்கான 18 சதவிகித ஜிஎஸ்டியை தொடரலாம்
போன்ற பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
இதர பொருட்கள் மீதான ஜிஎஸ்டி:
வரி கட்டமைப்பை எளிதாக்குவது மற்றும் பல்வேறு பொருட்களுக்கான விகிதங்களை சரிசெய்வதை நோக்கமாகக் கொண்ட மற்றொரு அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகளையும் கவுன்சில் விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில்,
- பேக்கேஜ்ட் குடிநீர் (20 லிட்டர் மற்றும் அதற்கு மேல்) மீதான ஜிஎஸ்டியை 18 சதவிகிதத்திக் இருந்து 5 சதவிகிதமாக குறைத்தல்
- 10,000 ரூபாய்க்கு கீழ் உள்ள சைக்கிள்கள் மற்றும் உடற்பயிற்சி நோட்புக்ஸ் மீதான ஜிஎஸ்டியை 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைத்தல்
- ரூ.15,000/ஜோடிக்கு மேல் விலையுள்ள காலணிகள் மற்றும் ரூ.25,000க்கு மேல் உள்ள ஆடம்பர கைக்கடிகாரங்கள் மீதான ஜிஎஸ்டியை 18 சதவிகிதத்தில் இருந்து 28 சதவிகிதமாக உயர்த்துவது
- இந்த நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், 22,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டக்கூடும்
என்பன போன்ற பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தேவையான சீர்திருத்தங்கள்:
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம் மற்றும் 28 சதவிகிதம் என நான்கு அடுக்கு கட்டமைப்பைப் பின்பற்றுகிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கு குறைந்தபட்ச அடுக்கில் வரி விதிக்கப்படுகிறது. அதே சமயம் ஆடம்பர பொருட்களுக்கு கூடுதல் செஸ் விதிக்கப்படும்.
எவ்வாறாயினும், சராசரி ஜிஎஸ்டி விகிதம் வருவாய்-நடுநிலை விகிதமான 15.3 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது. இதன் காரணமாக வரி அடுக்குகளை மறுசீரமைப்பது மற்றும் வருவாய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது குறித்து கவுன்சில் பரிசீலிக்க தூண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 21 கூட்டம் ஜிஎஸ்டி கொள்கையில் ஒரு முக்கிய தருணத்தை குறிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது நுகர்வோர் மற்றும் வணிகங்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும். ஒருவேளை மேற்குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அடித்தட்டு மக்கள் மீதான வரிச்சுமை குறையும். மேலும், மீதமாகும் பணம் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க உதவும்.