சில பொருள்கள் மற்றும் சேவைக்கான ஜிஎஸ்டி வரி, ஜூலை 18ஆம் தேதியுடன் உயர்த்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, சில புதிய பொருள்களும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்பட உள்ளதாக நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


 






ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றதையடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநில நிதித்துறை அமைச்சர்கள், மத்திய, மாநில வருவாய்த்துறை அலுவலர்கள் அங்கும் வகிக்கும் குழுவின் பரிந்துரைகளை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்று கொண்டு உள்ளது. அதன்படி, முத்திரை இல்லாத ஆனால் பேக் செய்யப்பட்ட (உள்ளூர்) பால் மற்றும் விவசாய பொருட்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.





இரண்டு நாள்களாக நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், "விலை மாற்றத்தை அமல்படுத்துவதற்கான தேதி ஜூலை 18ஆம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது வரை விலக்கு அளிக்கப்படும்" என்றார்.


பன்னீர், லஸ்ஸி, மோர், பேக் செய்யப்பட்ட தயிர், கோதுமை மாவு, மற்ற தானியங்கள், தேன், பப்பாளி, உணவு தானியங்கள், இறைச்சி மற்றும் மீன் (உறைய வைக்கப்பட்டதை தவிர்த்து), பொயங்கி அரிசி, வெல்லம் ஆகியவற்றின் விலை ஜூலை 18ஆம் தேதியுடம் உயர்கிறது. தற்போது, பிராண்டட் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.


பேக் செய்யப்படாத, லேபில் இடப்படாத பொருள்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. 


விடுதி அறைகள் (ஒரு இரவுக்கு ₹ 1,000 க்கும் குறைவான கட்டணம்) மற்றும் மருத்துவமனை அறைகள் (ஒரு நாளைக்கு ₹ 5,000 க்கு மேல் கட்டணம்) 12 சதவீத ஜிஎஸ்டி விகிதத்தின் வரம்பிற்குள் கொண்டு வருவதற்கான மாநில நிதி அமைச்சர்களின் பரிந்துரையையும் ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்றுக்கொண்டது.  இதுவும் ஜூலை 18 முதல் அமலுக்கு வருகிறது.


 









மேலும், சில சமையலறைப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி தற்போதைய 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.


ஜிஎஸ்டி முதன்முதலில் 2017ஆண்டு, ஜூலை 1ஆம் தேதி, அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஜூன் 2022 வரையிலான வருவாய் இழப்புக்கான இழப்பீடு மாநிலங்களுக்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதை நீட்டிப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.