கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் பொருளாதாரம் பெரிய இழப்பைச் சந்தித்தது. இதற்கிடையே அதற்கான விடிவுகாலமாக நாட்டின் அக்டோபர் நவம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி சேகரிப்பு 25 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இதனை நிதித்துறை அமைச்சக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த வரி நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து இரண்டாவது மிகப்பெரிய திரட்டுதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நிதித்துறை அமைச்சக அறிக்கையின்படி 2021 நவம்பர் மாதம் வரையில் ரூ 1,31,526 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி திரட்டப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு 23,978 கோடி ரூபாய் மாநிலங்களுக்கான பங்கு 31,127 கோடி ரூபாய் மற்றும் சர்வதேச இறக்குமதிக்கான ஜிஎஸ்டி பங்கு 32,165 கோடி ரூபாய் எனவும், செஸ் மட்டுமே ரூ 9606 கோடி ரூபாய் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி வரிப் பங்கினை அளிப்பதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருவதாக தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பிடிஆர் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இழப்பீடாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ 40,000 கோடியை இந்திய அரசு வழங்கியுள்ளது, தமிழ்நாட்டிற்கு ரூ 2,036.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஜூலை 15ம் தேதி இழப்பீடு பற்றாக்குறையாக கடன் திட்டத்தின் கீழ் ரூ. 75,000 கோடியை மத்திய அரசு வழங்கியது. இதன்மூலம், இந்த நிதியாண்டிற்கான, 72% இழப்பீடுத் தொகையை மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி முறையை அமல்படுத்தியதால் ரூ.1.10 லட்சம் கோடி அளவிலான வருவாய் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சார்பில் சிறப்பு சாளரம் ஒன்றின் மூலம் கடன் உதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது.இழப்பீட்டை எதிர்கொள்வதற்கான நிதியை கடன் வசதியின் மூலம் வழங்கும் ஏற்பாடுகளுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் (சட்டமன்றங்களுடன் கூடிய) யூனியன் பிரதேசங்கள் ஒப்புக்கொண்டன. இதனையடுத்து, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சார்பாக இந்த சிறப்பு சாளரத்தின் வாயிலாக இந்திய அரசு கடன்களைப் பெறுகிறது. அதன்படி, 2020-21ம் நிதியாண்டில் மாநிலங்களுக்கு ரூ.1.10 லட்சம் கோடி வழங்கப்பட்டது.