கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த 1,480 ஊராட்சி மன்றங்களுக்கு 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளையும், 803 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 78.05 கோடி ரூபாய்க்கான வங்கிக் கடனுதவிகளையும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார்.
3 மாவட்டங்களுக்கு சர்ப்ரைஸ்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, நூற்றாண்டு பொன் விழாவினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழாவில், உதயநிதி இன்று கலந்து கொண்டார்.
கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 860 ஊராட்சி மன்றங்களுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 412 ஊராட்சி மன்றங்களுக்கும் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 208 ஊராட்சி மன்றங்களுக்கும், 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை அவர் வழங்கினார். மேலும் 803 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 78.05 கோடி ரூபாய்க்கான வங்கிக் கடனுதவிகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, "பள்ளிக்குச் செல்கின்ற பிள்ளைகளுக்கு சமைத்துக் கொடுப்பதற்கு சிரமப்படக்கூடாது என்று காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தினார்.
உதயநிதி பேசியது என்ன?
இன்றைக்கு இந்தத் திட்டத்தின் மூலமாக, திங்கள் முதல் வெள்ளி வரை கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் 20 லட்சம் குழந்தைகள் இந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலமாக பயன்பெற்று வருகின்றார்கள். அதேபோல அரசுப் பள்ளியில் படித்த பெண்கள் உயர் கல்வி படிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு புதுமைப் பெண் என்ற திட்டத்தை முதலமைச்சர் அறிவித்தார்.
இந்தப் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் வருடந்தோறும் மூன்று இலட்சம் மாணவிகள் மாதம் தோறும் 1000 ரூபாய் பயன்பெற்று வருகிறார்கள். இப்போது அந்தத் திட்டம் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்ப் புதல்வன் என்ற திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வியில் படிக்கக்கூடிய மூன்று இலட்சத்து ஐம்பாதாயிரம் மாணவர்கள் மாதம் தோறும் 1000 ரூபாய் பயன்பெற்று வருகிறார்கள்.
அதேபோல இந்தியாவிலேயே அதிகமான தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு தான். அதிகளவில் வேலைவாய்ப்பை தரக்கூடிய மாநிலங்களின் பட்டியலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடத்தில் விளங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டு பெண்கள் 43 சதவீதம் பேர் பணிக்குச் செல்வதன் மூலமாக ஒட்டுமொத்த இந்தியாவில் வேலைக்குச் செல்கின்ற மகளிர் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது" என்றார்.