மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்த பிறகும், கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், இன்று சென்னையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரன் தங்கம் ரூபாய் 960 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் தங்கம் சென்னையில் ரூபாய் 54 ஆயிரத்து 600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 6 ஆயிரத்து 825க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை:


சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூபாய் 6 ஆயிரத்து 705க்கு விற்கப்பட்டது. இன்று ஒரு கிராமிற்கு ரூபாய் 120 உயர்ந்து இன்று கிராமிற்கு ரூபாய் 6 ஆயிரத்து 825க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை மட்டுமின்றி வெள்ளி விலையும் இன்று வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் உயர்ந்துள்ளது. வழக்கமாக பைசா கணக்கில் உயர்ந்து வந்த வெள்ளி இன்று ரூபாய் அளவில் உயர்ந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 95க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 95 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் இன்று கிராமிற்கு ரூபாய் 7 ஆயிரத்து 820க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 58 ஆயிரத்து 240க்கு விற்கப்படுகிறது.

சாமானியர்கள் வேதனை:


தங்கம் நகையாக இருந்தாலும் பொதுமக்களின் அவசரத் தேவைக்கான பொருளாக தங்கமே உள்ளது. பெரும்பாலும் சாதாரண மக்களின் முதலீடாக தங்கம் கருதப்படுகிறது. அவசர காலத்தில் பொதுமக்கள் தங்களின் பணத்தேவைக்கு தங்கத்தையே பயன்படுத்துகின்றனர். இந்த சூழலில், தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உச்சத்திலே இருந்து வருகிறது. மத்திய அரசு நடப்பாண்டில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், தங்கம் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதமாக குறைத்தது. 


இதையடுத்து, ஓரிரு நாட்கள் மட்டும் தங்கம் விலை இறங்கு முகத்தில் சென்றது. அதன்பின்பு, தொடர்ந்து தங்கம் விலை உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. தற்போது மீண்டும் தங்கம் விலை 55 ஆயிரத்தை ஒரு சவரனுக்கு நெருங்கியிருப்பது சாமானியர்களுக்கு தங்கத்தை எட்டாக்கனியாக மாற்றியுள்ளது. இதனால், தங்கம் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.