ஆசியாவின் முக்கியமான நாடுகளில் ஒன்று வியட்நாம். இந்த நாட்டின் வடக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீசிய யாகி புயல் காரணமாக அங்கு ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை சிதைந்துள்ளது. அந்த நாட்டின் தலைநகரான ஹானோய் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.


226 பேர் உயிரிழப்பு:


அந்த நாட்டின் தலைநகர் ஹானோயில் பாயும் சிவப்பு ஆறில் இருந்து பல இடங்களில் புகுந்த வெள்ள நீர் இதுவரை வடியவில்லை. பல இடங்களில் தண்ணீர் கழுத்து அளவிற்கு தேங்கியுள்ளது. இதுவரை யாகி புயல் காரணமாக 226 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹானோயில் உள்ள சில பகுதிகளில் சாலைகளில் முழங்கால் அளவிற்கு சேறு, சகதி கலந்த நீர் ஓடுகிறது.


200க்கும் மேற்பட்டோர் உயிரை பறித்துள்ள இந்த யாகி புயல் காரணமாக சுமார் 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அந்த நாட்டில் உள்ள நு கிராமத்தில் மட்டும் 55 பேர் மாயமாகியுள்ளனர். புயலில் சிக்கியவர்களை மீட்பதற்காக அந்த நாட்டின் பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். 300 மீட்பு வீரர்களும், 359 உள்ளூர் அதிகாரிகளும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  


15 ஆயிரம் பேர் பாதிப்பு:


இந்த புயல் காரணமாக அந்த நாட்டில் உள்ள 25 ஆயிரம் ஹெக்டேர்ஸ் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வியட்நாம் நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் வீசிய புயல்களிலே மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்திய புயல் இந்த புயல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை வெளியான தகவலின்படி, இந்த யாகி புயலால் ஏற்பட்ட வெள்ளம்  காரணமாக அந்த நாட்டில் உள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மக்களின் இயல்பு வாழ்க்கையை மிகவும் மோசமாக சிதைத்துள்ள இந்த புயல் காரணமாக சுமார் 1.5 மில்லியன் கோழிகள், வாத்துக்கள் உயிரிழந்துள்ளது. மேலும், பன்றிகள், எருமைகள், பசுமாடுகள் ஆகியவையும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் அவதி:

மின்தடை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருவதால் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  மேலும், நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க சிறப்பு மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.