அதானி குழுமத்தின் தலைவர், கோடீஸ்வரர் கெளதம் அதானியின் நிகர மதிப்பு கடந்த ஆறு மாதங்களில் 60.2 பில்லியன் டாலர் (₹4 டிரில்லியன்களுக்கு மேல்) சரிந்துள்ளது என்று தகவல்கள் தெரிகின்றன.


ஆறு மாதங்களில் 60.2 பில்லியன் சரிவு


கௌதம் அதானி கடந்த ஜனவரி 27 ஆம் தேதி அன்று தனது சொத்து மதிப்பில் $20.8 பில்லியனை இழந்து, ஒரே நாளில் மிகப்பெரிய இழப்பை பதிவு செய்தது அனைவருக்கும் நினைவிருக்கும். அப்போதிலிருந்து தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த அவர் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் உள்ள 6 மாதங்களில் பெருமளவு சரிவை சந்தித்ததாக ப்ளூம்பெர்க் தகவல் தெரிவித்துள்ளது. அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி கடந்த ஆறு மாதங்களில் 60.2 பில்லியன் டாலர் (₹4 டிரில்லியன்களுக்கு மேல் அல்லது ரு.49,73,39,89,20,000) இழந்துள்ளார்.



ஒரே நாளில் $20.8 பில்லியன் சரிவு


ஜனவரி 27 அன்று, ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் கணக்கு மோசடி மற்றும் பங்குச் சூழ்ச்சி என்று குற்றம் சாட்டிய நாளில், அவர் ஒரே நாளில் மிகப்பெரிய அளவிலான சரிவையும் பதிவு செய்தார், அப்போது ஜனவரி 27 அன்று, $20.8 பில்லியனை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை அதானி மறுத்துள்ளார். முன்னதாக மே மாதம், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் ஒழுங்குமுறை தோல்வி மற்றும் அதானி குழுமத்தின் சட்ட மீறல்கள் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு, அதானியின் பங்கு விலை கையாடல் அல்லது விதிமுறை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து இப்போது நிரூபிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. 


தொடர்புடைய செய்திகள்: Rahul Gandhi Mechanic Video: “பைக் ஓட்ட விடமாட்றாங்க” - மெக்கானிக்குகளிடம் புலம்பிய ராகுல் காந்தி.. வைரல் வீடியோ..!


அதானி எதிர்ப்பு அறிக்கை


ஜூன் 27 அன்று, கெளதம் அதானி தனது முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஆண்டறிக்கையில், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையைப் பற்றிக் குறிப்பிட்டார், அதில் தோல்வி இல்லை என்று கூறினார். அதானி இந்த அறிக்கையை 'தவறான தகவல்' மற்றும் 'காலாவதியான மதிப்பிழந்த குற்றச்சாட்டுகள்' என்று அழைத்தார், அவை அவரது நற்பெயருக்கு சேதம் விளைவிக்கவும், பங்கு விலைகளை வேண்டுமென்றே குறைக்கவும் கூறப்பட்ட பொய் என்றார்.



மதிப்பு உயர்ந்த மற்ற 500 பணக்காரர்கள்


Bloomberg Billionaires Index இன் படி, உலகின் 500 பணக்காரர்கள் இந்த ஆண்டின் முதல் பாதியில் 852 பில்லியன் டாலர் அளவுக்கு பணக்காரர்களாக வளர்ந்துள்ளனர். குறியீட்டின் ஒவ்வொரு உறுப்பினரும் கடந்த ஆறு மாதங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு $14 மில்லியன் சம்பாதித்துள்ளனர். அதுபோக எலன் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோர் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டு உள்ளனர். ட்விட்டர் vs த்ரெட்ஸ் மோதலால் ஒருவருக்கொருவர் கொம்புகளை சீவிக்கொண்டனர். இந்த சண்டைக்கிடையிலும், ஜூன் 30 வரை மஸ்க் இந்த ஆண்டு, $96.6 பில்லியன் சம்பாதித்துள்ளார். மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் $58.9 பில்லியன் சேர்த்துள்ளார்.