கடந்த மே மாதம் பெங்களூருவைச் சேர்ந்த டிஜிட்டல் பேங்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான ’ஓப்பன்’ இந்தியாவின் நூறாவது யூனிகார்ன் நிறுவனமாக உருவெடுத்து சாதனை படைத்துள்ளது. 


பொதுவாக ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்பைக் கொண்டிருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வணிக மொழியில் ‘யுனிகார்ன்’ நிறுவனங்கள் என குறிப்பிடப்படுகின்றன.


இந்தியாவின் 100ஆவது யுனிகார்ன் நிறுவனம்


இந்நிலையில், ’ஃபின் டெக்’ எனப்படும் நிதி தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த ’ஓப்பன்’, மும்பையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் IIFL நிதி நிறுவனத்திடம் இருந்து 50 மில்லியன் டாலர்கள் திரட்டிய பிறகு இந்தச் சாதனையை படைத்துள்ளது.




முன்னதாக ஓப்பன் நிறுவனத்தின் இணை நிறுவனர் அனிஷ் அச்சுதன், தான் சிறுவயதில் வீட்டிலிருந்து வெளியேறியது முதல், இணையம் மீதாத தன் காதல், ரயில் நிலையங்களில் தங்கியது என தான் கடந்து வந்த பாதை குறித்த சுவாரஸ்யத் தகவல்களை தனியார் சேனலின் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.


கோழிக்கோட்டின் அருகில் உள்ள சிறு நகரமான பெரிந்தல்மன்னாவில் பொறியாளர் தந்தைக்கும், ஆசிரியை அன்னைக்கும் பிறந்த அனிஷ், சிறு வயதில் ஒரு ஊடகவியலாளர் ஆக வேண்டும் என்ற கனவுடனேயே வளர்ந்துள்ளார்.


இணையம் மீதான காதல்


ஆனால் இணையம் தன்னை எவ்வாறு ஈர்த்தது என்பது குறித்து பகிர்ந்துள்ள அனிஷ், “ இணையத்தின் ஆற்றலால் நான் ஈர்க்கப்பட்டேன். குறிப்பாக டாட் காம். ஊடகத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற என் கனவுடன் அது இணைந்திருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.


2001ஆம் ஆண்டில் இணையம் மீதான ஆர்வம் அதிகரித்து 10ஆம் வகுப்பு முடித்து கையுடன் வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறி, திருவனந்தபுரத்தை அடைந்த அனீஷ், முதல் மூன்று ஆண்டுகள் கோயில்கள், ரயில் நிலையங்கள் என வாழ்ந்துள்ளார். பின் கல்லூரி மாணவர்களை இணை நிறுவனர்களாகக் கொண்டு ’இந்தியா ஃபர்ஸ்ட்’ எனும் இணையம் மற்றும் வயர்லெஸ் சேவை நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.


அன்று முதல் இறுதியாக 2017ஆம் ஆண்டு ஓப்பன் நிறுவனத்தைத் தொடங்கியது வரை அனிஷ் வெற்றி தோல்வி இரண்டையும் மாறி மாறியே சந்தித்து வருகிறார்.


ஓப்பன் நிறுவன ஊழியர்களுடனான பிணைப்பு


முன்னதாக தன் நிறுவன ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்துப் பேசிய அனிஷ், ”ஓப்பனில் வேலை செய்யும் அனைவர் சம்பந்தப்பட்ட விஷயங்களும் குடும்பத்தினரைப் போலவே கவனித்துக் கொள்ளப்படுகிறது. கொரோனா காலத்தில் ​​துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் எங்கள் ஊழியர்களில் சிலரை இழந்தபோதிலும், அந்த ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் தற்போது எங்கள் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.


தொடக்கம் முதலே எல்லா கடினமான சூழ்நிலைகளிலும் ஒன்றாகப் பயணிக்க உதவும் ஒரு பிணைப்பு எங்களிடம் உள்ளது. முதல் நாளிலிருந்தே இந்தப் பிணைப்பு உருவாக்கப்பட்டால் கொரோனா போன்ற கடினமான காலங்களில் எளிதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்


தற்போது உள்ள யுனிகார்ன் நிறுவனங்களின் ஃபிளிப்கார்ட் நிறுவனம் சந்தை மதிப்பில் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் பைஜூஸ் உள்ளது. இந்தியாவின் 100 யுனிகார்ன் நிறுவனங்களில் 20 நிறுவனங்கள் ஃபின் டெக் துறையையும், 23 நிறுவனங்கள் இகாமர்ஸ் துறையையும் சேர்ந்தவையாக உள்ளன.