தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பிய அவர், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்த விஜயகாந்த், சென்னையில் உள்ள மருத்துவமனையில் அவ்வப்போது வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார்.



அண்மையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் தனது 69 வது பிறந்த நாளை கொண்டாடினார். 2006 ம் ஆண்டு முதல் தனது பிறந்தநாளை ‘வறுமை ஒழிப்பு தினமாக’ விஜயகாந்த் கொண்டாடி வரும் சூழலில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்த ஆண்டு தனது பிறந்தநாளுக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க தொண்டர்கள் யாரும் வீட்டுக்கு வர வேண்டாம் என்றும் தேமுதிகவினர் அவரவர் ஊர்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குமாறும்  வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதனால் அவர் யாரையும் சந்திக்காமல் எளிமையாக பிறந்தநாள் கொண்டாடினார்.

 

பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டின் முன்பு கட்சிக் கொடி மற்றும் வண்ண விளக்குகளால் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,  தே.மு.தி.க. நிறுவனரும் தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் அவர்கள் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்தநாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டிருந்தார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

 

இதனிடையே, கடந்த மாதம் 30 ஆம் தேதி தனது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் 2 உதவியாளர்களுடன் சிகிச்சைக்காக விஜயகாந்த் துபாய் புறப்பட்டு சென்றார். அப்போது அவரது உதவியாளர்கள் வீல் சேரில் வைத்து விஜயகாந்தை வேகமாக தள்ளிக் கொண்டே விமான நிலையத்திற்குள் நுழைந்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவரது தொண்டர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தான் நலமாக உள்ளதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த 'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கால் மேல் கால் போட்டு விஜயகாந்த் அமர்ந்திருந்தார்.

 

இந்நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் பூரண நலம் குணமடைந்து வீடு திரும்பினார். இன்று அதிகாலை 2.30 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார். நாங்க சிகிச்சை பெற்று குணம் அடைந்து விஜயகாந்த் வீடு திரும்பிய செய்தி கேட்டு விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.