அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான பண மோசடி வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


அதிமுக ஆட்சியில் செந்தில்பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான பண மோசடி வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை தொடர்ந்து நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 






கடந்த 2011 ம் ஆண்டு முதல் 2015 ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. தற்போது இவர் திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். 


இந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது அமைச்சர் செந்தில்பாலாஜி ஒரு சிலரிடம் ஓட்டுநர், நடத்துனர் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 3 வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகள் தற்போதுவரை சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 


இந்த சூழலில், பணமோசடி மூலமால சட்டவிரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக கடந்த 2021 ம் ஆண்டும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துரை அனுப்பிய சம்மனை கடந்த 1 ம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. 


இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான பண மோசடி வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை தொடர்ந்து நடத்தவும் உத்தரவிட்டது.