ஓய்வூதிய நிதி அமைப்பான இ.பி.எஃப்.ஒ., 2023-2024 ஆண்டிற்கான வட்டி விகிதத்தை 8.25%-ஆக உயர்த்தியுள்ளது. இது கடந்த மூன்றாண்டுகளில் இருந்ததைவிட அதிகமாகும். 


பி.எஃப். வட்டி உயர்வு:


கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 2021- 2022 ஆண்டுக்கான வட்டி விகிதம் 8.1 சதவீதமாக குறைத்திருந்தது. இந்த வட்டி விகிதம் 2020- 2021ம் ஆண்டில் 8.5 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், இபிஎஃப்ஒ, 2022-23 ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி வகிதம் 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இம்முறை 8.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழுவின் (Central Board of Trustees ) ஆலோசனை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வட்டி விகித உயர்த்தப்படுவதன் மூலம் 6 கோடி பணியாளர்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.டி.யின் முடிவுக்குப் பின், 2023 - 24-ஆம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிவிகித உயர்வு நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். புதிய வட்டி விகிதம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் மூலமாக அரசின் அங்கீகாரம் பெற்ற பின்னரே இ.பி.எஃப்.ஓ. உயர்த்தப்பட்ட வட்டி விகிதத்தை வழங்கும்.