வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.எஃப். பணமானது ஒவ்வொரு தொழிலாளியின் மிகப்பெரிய சேமிப்பாகும். ஓய்வுக்கு பிறகும், நெருக்கடியான காலகட்டத்திலும் நிறுவனத்தில் பணிபுரிந்த/ பணிபுரியும் நபருக்கு இந்த பணம் மிகப்பெரிய பக்கபலமாக இருக்கிறது. 

பி.எஃப் பணம்:

பி.எஃப். பணத்தை பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகுதான் எடுக்க வேண்டும் என்று இல்லாமல், பணிபுரியும்போதே ஏதேனும் அவசரத் தேவைக்கு எடுக்கலாம் என்ற விதியும் இருக்கிறது. அதாவது, மருத்துவ, திருமணம், வீடு கட்டுதல் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய தேவைக்கு பி.எஃப். பணத்தின் ஒரு பகுதியை தேவைப்படும் அவசர காலத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த விதிகளை சில பயனாளிகள் தவறாக பயன்படுத்துவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. மத்திய அரசு விரைவில் ஏடிஎம் மற்றும் யுபிஐ வாயிலாக பி.எஃப். பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியை கொண்டு வர உள்ளது. இதனால், பயனாளிகள் அவசர தேவையில்லாமல் ஆடம்பர தேவைக்காகவும் இந்த பணத்தை எடுக்கும் சூழல் உருவாகலாம் என்று பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். 

வீண் செலவு செய்தால்?

பி.எஃப். சட்டப்படி, இ.பி.எஃப். விதி 1952ன்படி, பி.எஃப். பணத்தை எடுத்த ஒரு உறுப்பினர், வரையறை செய்யப்பட்ட காரணத்துக்கு அப்பால் செலவு செய்திருந்தால் 3 ஆண்டுகளுக்கு மீண்டும் பணம் எடுக்க முடியாது. இல்லாவிட்டால், முன்பு எடுக்கப்பட்ட பணத்தை அபராதத்துடன் வசூல் செய்யும் வரை மீண்டும் பணம் எடுக்க அனுமதி இல்லை என்றும் அந்த விதிகளில் உள்ளது. 

மத்திய அரசு வருங்கால வைப்பு நிதித் தொகை மீது தளர்வுகளை விரைவில் அமல்படுத்த உள்ளதால், பயனாளிகள் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்தோ அல்லது அவசியமற்ற செலவு செய்ய இந்த பணத்தை பயன்படுத்தி விடுவார்களோ? என்ற அச்சமும் உருவாகியுள்ளது. 

கடும் நடவடிக்கை எடுக்க முடிவு:

இதனால், பி.எஃப். பணத்தை எடுப்பதற்கான விதிகளையும், தவறாக பயன்படுத்தினால் அதற்கான தண்டனைகளையும் பயனாளிகளிடம் தீவிரமாக கொண்டு செல்ல இ.பி.எஃப். நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர். 

வருங்கால வைப்பு நிதி ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு சேமிப்புத் திட்டம் இந்த பி.எஃப். திட்டமாகும். ஒரு பணியாளரின் மாதச் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி ( பெரும்பாலும் 12 சதவீதம்) பிடித்தம் செய்யப்படகிறது. அதே அளவிற்கு சமமான தொகையை அந்த பணியாளர் பணிபுரியும் நிறுவனமும் அந்த பணியாளர் பெயரில் செலுத்தும்.  இந்த தொகையே பி.எஃப். பணம் ஆகும். 

நடுத்தர குடும்பத்தினர் பலரும் தங்களது வாரிசுகளின் படிப்பிற்காகவும், திருமணத்திற்காகவும், அவர்களின் சொந்த வீடு கனவுக்காகவும் இந்த பணத்தை சேமிக்கலாம்.